நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ததை கண்டித்து இன்று சேலம் கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ததை கண்டித்து இன்று சேலம் கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி.

சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி பேசியது:

சென்னையில் கள்ள வாக்கு செலுத்திய நபரான நரேஷ் குமாரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

கள்ள வாக்கு போட்டவரை பிடித்துக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் போடுவது நியாயமா? நகை பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு என 12 வழக்குகள் உள்ள நரேஷ்குமாருக்கு  காவல்துறை பாதுகாப்பு வழங்குகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடத்தும் வகையில் ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் ஏன் ரெளடி நரேஷ்குமார் கைது செய்யப்படவில்லை?

அவர் கைது செய்யப்பட்டு இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது. ரெளடிகள் கள்ள வாக்கு போட்டதால் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. காவல்துறையும் மாநில தேர்தல் ஆணையமும் திமுக வெற்றி பெற துணை நின்றுள்ளது. நேர்மையாக வெற்றி பெறவில்லை.  வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற கட்சி திமுக அல்ல. சென்னையில் கள்ள வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது. 

கடந்த 2021 தேர்தலில் 67 முதல் 68 சதவீதம் வரை வாக்குப்பதிவு இருந்தது. ஆனால் தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 43 சதவீதம் மட்டும் வாக்குகள் பதிவாகி உள்ளது. மக்கள் அச்சம் அடைந்த நிலையில் வாக்கு செலுத்தவில்லை. மாறாக சென்னை, கோவை நகரங்களில் 13 சதவீதத்திற்கும் மேலாக கள்ள வாக்கு செலுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு வாக்கு செல்வதாக தெரிய வந்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும். வாக்குக்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரைக்கும் பரிசுப் பொருட்களும் வழங்கி திமுக மாயாஜால வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை ஒடுக்குவதாக நினைத்தால் திமுக காணாமல் போய்விடும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது திமுக முன்னாள் அமைச்சர்கள்  13 பேர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு உள்ளன என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது.

1972-இல் அதிமுக தொடங்கியபோது இதேபோல கட்சி தொண்டர்கள் மீது வழக்குப் போட்டனர். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் வழக்குகளை சந்தித்து மக்களை சந்தித்து போராட்டம் நடத்தி ஆட்சிக்கு வந்தார். அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி ஆவார். பொய் வழக்கு போட்ட நிலையில் அதிமுகவை அசைக்க முடியாத காட்சியாக உருவாக்கி காட்டியவர் எம்ஜிஆர்.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது  திமுக வேண்டும் என்று வழக்குகளைப் போட்டு பல்வேறு துன்பங்களை அளித்தனர். அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. வழக்குகளை போட்டு பூச்சாண்டி காட்ட வேண்டாம். மக்கள் பிரச்சினைகளுக்காக சிறை செல்ல தயாராக உள்ளோம். மக்கள் பிரச்சனைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக இருக்கும்.

அதிமுக 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக. அதிமுகவை அழிக்க நினைத்தால் திமுக தான் காணாமல் போகும். சேலம் நகரில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. விளம்பரத்துக்காக ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து செவ்வாய்க்கிழமை சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து செவ்வாய்க்கிழமை சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்.

அதிமுக ஆட்சியில் தொடங்கிய அம்மா மினி  கிளினிக்குகளை மூடி திமுக சாதனை படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு தற்போது முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைக்கிறார். அதிமுகவில் போடப்பட்ட திட்டங்கள் தான் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு வருகிறது.

நெல்கொள்முதல் முறையாகச் செய்யவில்லை. விவசாயிகளுக்கு நஷ்டத்துக்கு உரிய பணம் கொடுக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போது முடிந்துவிட்டது. அடுத்து வீட்டு வரி 200 மடங்கு திமுக அரசு உயர்த்த போகிறது.  நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். அப்போதுதான் அதிமுக ஆட்சியின் பற்றி மக்களுக்கு தெரியவரும்.

திமுக வேண்டுமென்றே  திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு வருகிறது. சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வைப்போம்.
தேர்தல் முறைகேடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையமும் காவல்துறையும் பதிலளிக்க வேண்டும் என்றார்.


முன்னாள் அமைச்சர் செம்மலை மயங்கி விழுந்தார்:

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.செம்மலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் மயக்கம் தெளிந்து மீண்டும் மேடையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

சேலம் கோட்டை பகுதியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்த அதிமுக கட்சி அமைப்பு செயலாளர் செம்மலை கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டு வரும் கட்சி நிர்வாகிகள்.
சேலம் கோட்டை பகுதியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்த அதிமுக கட்சி அமைப்பு செயலாளர் செம்மலை கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டு வரும் கட்சி நிர்வாகிகள்.


ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, எம்எல்ஏ-க்கள் பாலசுப்பிரமணியன், சித்ரா, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com