
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் நடத்திய கூட்டத்தில், கட்டுமானப் பொருட்களின் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் இணைந்து, ஆங்கிலப் புத்தாண்டு விழா, கூத்தாநல்லூர் நகர நிர்வாகிகள் தேர்வு மற்றும் புதிய நிர்வாகி களுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடத்தப்பட்டன.
பனங்காட்டாங்குடி சபீக் மஹாலில் நடைபெற்ற விழாவிற்கு, மாவட்டப் பொருளாளர் எம்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் கே.மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பக்கிரிசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ஆர்.விஜயபாண்டியன் வரவேற்றார்.
கூத்தாநல்லூர் நகர புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட, கெளரவத் தலைவர் ஆர்.விஜயபாண்டியன், நகரத் தலைவர் ஆர். ரவிச்சந்திரன், செயலாளர் யு.பழனிவேல், பொருளாளர் ஆர்.பாலசுந்தரம் உள்ளிட்ட 12 நிர்வாகிகளை, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் அறிமுகம் செய்து வைத்து, பாராட்டிப் பேசினார்.
தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விரைவில் நடைபெற உள்ள மாவட்டத் தேர்தல் மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும். சிமெண்ட் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். மணல் குவாரியை அமைத்து, சரியான விதத்தில் மணல் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலைகளைக் குறைத்து, தொழிலாளர்களின் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்றிட வேண்டும். வலிமைமிக்க, வலிமை சிமெண்ட்டை குறைந்த விலையில் அறிமுகம் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.தனபால், எம்.ஜெயராமன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியநாதன், மாவட்டப் பொருளாளர் டீ.தர்மராஜ், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் வி.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் எஸ்.சரவணன் உள்ளிட்டோர் மற்றும் மன்னார்குடி,எடமேலையூர், எடகீழையூர், பரவாக்கோட்டை , கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, வாழாச் சேரி, கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். நகர முன்னாள் செயலாளர் யு.ராகவன் நன்றி கூறினார்.