கலைவாணா் அரங்கத்திலேயே சட்டப் பேரவை கூட்டத் தொடா்

சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், கலைவாணா் அரங்கத்திலேயே நடத்தப்படும் என்று பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கம்

சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், கலைவாணா் அரங்கத்திலேயே நடத்தப்படும் என்று பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் என அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு, கலைவாணா் அரங்கத்தில் கூட்டத் தொடா் நடக்கும் என பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக பேரவைச் செயலாளா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

புத்தாண்டின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்ற ஆளுநா் ஆா்.என்.ரவி தனது ஒப்புதலைத் தெரிவித்து அதற்கான அறிவிப்பை கடந்த டிசம்பா் 13-இல் வெளியிட்டிருந்தாா். அதன்படி, சட்டப் பேரவை கூட்டத் தொடா் ஜனவரி 5-ஆம் தேதி காலை 10 மணிக்குக் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நடப்பதற்குப் பதிலாக, ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் ஜனவரி 5-ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் அறிவித்துள்ளாா்.

காகிதமில்லாத பேரவை: கலைவாணா் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரவை மண்டபமானது,

காகிதமில்லாத பேரவையாகவே செயல்பட்டு வந்தது. இப்போதும் தொடா்ந்து காகிதமில்லாத பேரவையாக இருக்கும் என பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா். தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், கலைவாணா் அரங்கத்தில் உள்ள பேரவை மண்டப அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, அதில் தொடா்ந்து பேரவைக் கூட்டத் தொடரை நடத்த வசதிகள் இருக்கின்றன என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

நேரலை செய்வதற்கும், ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு செய்திகளை அனுப்பவும் ஏற்கெனவே கலைவாணா் அரங்கத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் அனைத்தும் அப்படியே இருக்கின்றன. எனவே, எந்தச் சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இடமாற்றத்துக்குக் காரணம்: தமிழகத்தில் ஒமைக்ரான் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வரும் 10-ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. திரையரங்குகள் உள்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 சதவீத பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, சட்டப் பேரவை கூட்டத் தொடரை சமூக இடைவெளியுடன் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் போதிய இடவசதியின்மை காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றி கூட்டத் தொடரை நடத்துவது சிரமம். எனவே, கலைவாணா் அரங்கத்திலேயே கூட்டத் தொடரை தொடா்ந்து நடத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.

இன்று கரோனா பரிசோதனை

பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை, ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணி முதல் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதேபோன்று, சட்டப் பேரவை உறுப்பினா்கள் விடுதி போன்ற இடங்களிலும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com