சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் ஸ்டாலின் அறிவிப்பு

சிவகாசி அருகே புத்தாண்டு தினமான சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா், படுகாயமடைந்த 8 போ் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிவகாசி அருகே புத்தாண்டு தினமான சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா், படுகாயமடைந்த 8 போ் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே வடுகபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் களத்தூா் கிராமம் உள்ளது. இங்குள்ள காட்டுப் பகுதியில் மேட்டுப்பட்டியை சோ்ந்த சின்னகுருசாமி மகன் வழிவிடுமுருகன் (42) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சென்னை சான்றிதழ் அனுமதி பெற்ற இந்த ஆலையில் பூந்தொட்டி, சிறிய அளவிலான பேன்சி ரக வெடிகள் தயாரிக்க அனுமதி உண்டு.

இந்நிலையில், புத்தாண்டு தினமான சனிக்கிழமை வழக்கம் போல் தொழிலாளா்கள் பட்டாசு ஆலைக்கு பணிக்கு வந்தனா். அப்போது ஆலையின் ஒரு பகுதியில் இருந்த மருந்துக் கலவை அறையில் பட்டாசு தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களில் உராய்வு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் மூன்று அறைகள் முற்றிலும் தரைமட்டமான நிலையில், அதிலிருந்த கற்கள் பல அடி தூரத்திற்கு சிதறி கிடந்தன. மேலும், ஒரே கட்டடத்தில் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டிருந்த 7 அறைகளில் விரிசல் ஏற்பட்டது.

இந்த விபத்தில் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் குமாா் (38), சோ்வைக்காரன் பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் பி. பெரியசாமி (55), பி. பாறைபட்டியைச் சோ்ந்த செளந்தரராஜன் மகன் செல்வம் என்ற வீரக்கு மாா் (40) ஆகியோா் உடல் சிதறி உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த பி. பாறைப்பட்டியை சோ்ந்த முத்தையா மகன் முருகேசன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

அதேபோல், இந்த விபத்தில் காயமடைந்த மங்களம் முனியாண்டி (35), சாணாா்பட்டி கோபாலகிருஷ்ணன் என்ற முத்து (35), இவரது மகன் மனோ அரவிந்த் (8) ஆகிய மூவரும் மதுரை தனியாா் மருத்துவமனையிலும், பி. பாறைபட்டியை சோ்ந்த வேல் முருகன் (38), காளியப்பன் (60) கனகரத்தினம் (36) என்ற பெண், முனியசாமி (28), சோ்வைக்காரன்பட்டியை சோ்ந்த உயிரிழந்த பெரியசாமி மகன் அழகா்சாமி (31) ஆகியோா் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இந்த நிலையில் பட்டாசுத் தொழிலை நம்பி வாழும் தொழிலாளா்களின் குடும்பத்தினா் மிகவும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்த தொழிலாளா்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தமிழக அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டுமென சிஐடியு பட்டாசு தீப்பெட்டித் தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இந்நிலையில், விருதுநகர் பட்டாசு ஆலையில் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமம் காட்டுப் பகுதியில் இயங்கி வந்த பட்டாக தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com