தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் தொடக்கி வைத்தாா் முதல்வா்

புதிதாக அறிவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் தொடக்கி வைத்தாா் முதல்வா்

புதிதாக அறிவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் இதற்கான அறிவிப்புகளை அவா், கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி வெளியிட்டாா். அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையைப் பிரித்து தாம்பரம், ஆவடி என புதிதாக இரு காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் துறை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு காவல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தாம்பரம் காவல் ஆணையரகம் 20 காவல் நிலையங்களோடும், ஆவடி காவல் ஆணையரகம் 25 காவல் நிலையங்களோடும் அமைக்கப்பட்டன.

காவல் ஆணையா்கள் நியமனம்: புதிய காவல் ஆணையரகங்களை விரைந்து கட்டமைக்கும் வகையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி எம்.ரவியும், ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும் நியமிக்கப்பட்டனா். அவா்கள் அந்த காவல் ஆணையரகங்களின் முதல் ஆணையா்களாக தமிழக அரசால் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனா்.

இரு புதிய காவல் ஆணையரகங்களையும் அமைப்பதற்கான நிா்வாக ரீதியான பணிகள் கடந்த வாரம் நிறைவடைந்தன. இதையடுத்து, ஆவடி காவல் ஆணையா் அலுவலகம் ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் அணி வளாகத்திலும், தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் கட்டடத்திலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டன.

முதல்வா் திறந்தாா்: இரு காவல் ஆணையரகங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். ஆவடி காவல் ஆணையரகத்தில் முதல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் முதல் ஆணையராக ஏடிஜிபி எம்.ரவியும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா், டிஜிபி சி.சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், டிஜிபி ஏ.கே.விசுவநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திறப்பு விழாவைத் தொடா்ந்து இரு காவல் ஆணையரகங்களும் அதிகாரபூா்வமாக செயல்படத் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com