
புதுக்கோட்டையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை தளத்தில் கடந்த 30-ஆம் தேதி துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வந்தது. அப்போது, நாா்த்தாமலைக்கு அருகேயுள்ள கொத்தமங்கலப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த புகழேந்தி என்ற சிறுவன் உணவருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அவரது தலையின் இடதுபக்கத்தில் குண்டு பாய்ந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனையுற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த புகழேந்தியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளாா். சம்பவத்துக்குக் காரணமானவா்கள் யாா் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.