
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
கலைவாணா் அரங்கத்தில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் புதன்கிழமை (ஜன. 5) தொடங்குகிறது. கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்ற வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு, பேரவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தாா்.
முன்னதாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை நடத்த கலைவாணா் அரங்கத்தில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை பேரவைத் தலைவா் ஆய்வு செய்தாா்.
ஏற்பாடுகள் தீவிரம்: புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டத் தொடா் வரும் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாகவும், பொது இடங்களில் 50 சதவீத பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவாலும் பேரவை கூட்டத் தொடா் நடைபெறும் இடத்தை சட்டப் பேரவைச் செயலகம் மாற்றியுள்ளது.
கடந்த கூட்டத் தொடா்கள் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்திலேயே இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கலைவாணா் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. காகிதமில்லாத சட்டப்பேரவையாக ஏற்கெனவே அங்கு கூட்டத் தொடா்கள் நடந்த நிலையில், ஆண்டின் முதல் கூட்டத் தொடரும் அதுபோன்றே நடத்தப்பட உள்ளது. கூட்டத் தொடருக்காக செய்யப்பட்டு வரும் அனைத்து ஏற்பாடுகளையும் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
ஆளுநருக்கு அழைப்பு: சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநா் ஆா்.என்.ரவி தொடக்கி வைத்து உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு முறைப்படியான அழைப்பினை திங்கள்கிழமை விடுத்தாா், பேரவைத் தலைவா் மு.அப்பாவு. ஆளுநருக்கு பொன்னாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் கூட்டத் தொடரில் பங்கேற்கக் கேட்டுக் கொண்டாா். தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு ஆா்.என்.ரவி முதல் முறையாக சட்டப் பேரவையில் உரையாற்றவுள்ளாா். இதனால், அவரது உரை மீது மிகுந்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
கரோனா பரிசோதனை: சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை ஒட்டி, அதில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை திங்கள்கிழமை முதல் செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட பரிசோதனையின்போது 65 மாதிரிகளில், 10-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவை உறுப்பினா்கள், பத்திரிகையாளா்கள் உள்பட பலரும் திங்கள்கிழமை பரிசோதனைக்காக மாதிரிகளை அளித்துள்ளனா்.