ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்துவரப்பட்டார்

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி அளவுக்கு பணமோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்துவரப்பட்டார்.
ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்துவரப்பட்டார்
ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்துவரப்பட்டார்

பெங்களூரு: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி அளவுக்கு பணமோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்துவரப்பட்டார்.

கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தங்கியிருந்த தகவலை அறிந்த தமிழக காவல்துறையினர், இன்று கைது செய்தனர்.

ஒசூர் அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜி, தமிழக எல்லையில், தமிழக காவல்துறை வாகனத்துக்கு மாற்றப்பட்ட்டார். அங்கிருந்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்துச் செல்லப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணமோசடி வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

அவரை கடந்த 20 நாள்களாக, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 தனிப்படையினர் தேடி வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

அவருடன், தலைமறைவாக இருக்க உதவிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணன், நாகேஷ், பாண்டியராஜன், பாலாஜி,  உறவினர் வசந்த் குமார் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்

கர்நாடகா மாநில தனியார் காரில் அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி அருகே ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவலர்கள் விருதுநகர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அவருக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் உட்பட 4 பேர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  என 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி விருதுநகர் அழைத்து செல்லப்பட்டனர்.

என்ன மோசடி?

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த அதிமுக முன்னாள் நிா்வாகி விஜயநல்லதம்பி ஆவின் மேலாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றிவிட்டாா் என ரவீந்திரன் என்பவா் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகாா் அளித்தாா். அதே போன்று விஜயநல்லதம்பி அளித்தப் புகாரில், வேலை வாங்கித்தருவதற்காக ரூ.3 கோடியை முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்துள்ளேன். அதைப் பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாா். அதன் பேரில் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் நவ. 15 இல் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை டிசம்பர் 17ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே ராஜேந்திரபாஜாஜி தலைமறைவானாா். அவரை கைது செய்வதற்காக 8 தனிப்படைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் நியமித்தாா். கடந்த சில நாள்களாக அவா் இருக்குமிடம் தெரியாமல் தனிப்படையினர் திணறி வந்தனா்.

இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி ஓசூா், பெங்களூரு பகுதிகளில் தங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கூடுதலாக அமைக்கப்பட்ட 2 தனிப்படை காவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். ராஜேந்திரபாலாஜியிடம் நெருக்கமாக இருந்த விருதுநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் பலரது கைப்பேசிகளை காவலர்கள் கண்காணித்து வந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com