'ஒரே நபர் 672 நகைக்கடன் பெற்றுள்ளார்' - முறைகேடு குறித்து ஐ. பெரியசாமி விளக்கம்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலி நகைகள் வைத்து நகைக்கடன் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். 
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலி நகைகள் வைத்து நகைக்கடன் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். 

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்ததற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்தார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,

நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பது பற்றி சட்டப்பேரவையில் நேற்றே முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் பல இடங்களில் போலி நகைகளை வைத்தும், நகைகளை வைக்காமலும் நகைக்கடன் பெற்றுள்ளனர். 

ஆரணி, காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்து பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலையில் மார்வாடி ரத்னலால் என்பவர் ஒரே ஆதார் அட்டை, குடும்ப அட்டையை வைத்து 5 பவுனிற்கு கீழாக மொத்தம் 672 நகைக்கடன்களை பெற்றுள்ளார்.

அதுபோல, புதுக்கோட்டை கீரனூரில் ரூ. 1 கோடி மதிப்பிலான 102 நகைப் பைகளே இல்லை. இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் சொசைட்டியில் 283 நகைப்பைகள் இல்லை. இதன் மதிப்பு மட்டுமே 2 கோடி ரூபாய். 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்திலும் போலி நகைகள் வைத்து கடன் பெறப்பட்டது. இதுபோன்று பல இடங்களில் போலி நகைகள் வைக்கப்பட்டுள்ளது எங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

போலி நகை வைத்தவர்களுக்கு எல்லாம் எப்படி கடன் தள்ளுபடி அளிக்க முடியும்? முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

கூட்டுறவு சங்கங்களின் சட்டங்கள் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்பதை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளது என்றார். 

மேலும், தமிழகத்தில் கரும்பு கொள்முதல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்படுகிறது. கூட்டுறவு பண்டக சாலை, கூட்டுறவு சங்கங்களின் மூலமாக ஆங்காங்கே இருந்த விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், இடைத்தரகர்கள் யாரும் உள்நுழைய முடியாது' என்றார். 

தொடர்ந்து, கூட்டுறவு சங்கத் தேர்தல் சட்டத் திருத்த மசோதா குறித்து பேசுகையில், கடந்த ஆட்சியில் தேர்தலே நடத்தாமல் கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக அதிமுகவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் யார் முறைகேடு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com