இரவு நேர ஊரடங்கு விதிமீறல்: சென்னையில் 547 வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் விதிக்கப்பட்டிருக்கும் இரவு நேர ஊரடங்கை மீறியவர்களின் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் விதிக்கப்பட்டிருக்கும் இரவு நேர ஊரடங்கை மீறியவர்களின் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.

ஆகவே, நேற்று (06.01.2022) இரவு 10.00 மணி முதல் இன்று (07.01.2022) காலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன்பேரில், நேற்று சென்னை பெருநகரில் சட்டம்,ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் 312 வாகனத் தணிக்கை சாவடிகள் மற்றும் ரோந்து பணிகள் மேற்கொண்டு, இரவு நேர ஊரடங்கில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி வெளியே சுற்றியது தொடர்பாக 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது தொடர்பாக 462 வழக்குகளும், கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 1 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், போக்குவரத்து காவல் ஆளிநர்கள் மேற்கொண்ட வாகனத் தணிக்கைகள்
மற்றும் தீவிர கண்காணிப்பில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 இலகுரக வாகனம் என மொத்தம் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆகவே, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு சமயத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com