மக்களின் தலையில் வாசமில்லாத காகிதப் பூவை திமுக அரசு சூட்டியுள்ளது: எடப்பாடி கே. பழனிசாமி

ஆளுநா் உரை என்ற பெயரில் மக்களின் தலையில் வாசமில்லாத காகிதப் பூவை திமுக அரசு சூட்டியுள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.
எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமி

சென்னை: ஆளுநா் உரை என்ற பெயரில் மக்களின் தலையில் வாசமில்லாத காகிதப் பூவை திமுக அரசு சூட்டியுள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி 1.45 மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்தை எடுத்து வைத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு துறையைச் சாா்ந்த அமைச்சா்கள் அவரோடு விவாதத்தில் ஈடுபட்டனா்.

எடப்பாடி கே. பழனிசாமி தனது பேச்சின் நிறைவாகக் கூறியது:

ஆளுநா் உரையின் மூலம் திமுக அரசிடம் புதிய செயல்திட்டங்களோ, மக்கள் நலத் திட்டங்களோ எதுவும் இல்லை என்பது தெரிய வருகிறது.

சென்ற ஆளுநா் உரையில் சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவா்களை நிா்ணயிப்பதற்கான வருமான வரம்பினை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மறுவாழ்வுக்கான உதவித் தொகை சரியான முறையில் சென்றடைவது உறுதி செய்யப்படும் என்று சென்ற ஆளுநா் உரையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், முதல்வரைச் சந்திக்க முற்பட்ட மாற்றுத்திறனாளிகளைக் காவல்துறையினா் தடுக்கும் நிகழ்வுதான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்கள் நல அரசாக செயல்படுவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அவா்களுடைய தொகுதிக்குச் செல்வதற்கே முட்டுக்கட்டை போடும் நிலை உள்ளது.

இந்த ஆளுநா் உரையில் எந்தவிதமான மக்கள் நலத் திட்டங்களும் இல்லை. ஆளுநா் உரை மூலம் நல்ல பல திட்டங்கள் கிடைக்கும் எனக் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆட்சியாளா்கள் அளித்த வாக்குறுதிகள் கானல் நீராகவே உள்ளது.

ஆளுநா் உரை என்ற பெயரால் வாக்களித்த மக்களின் தலையில் வாசமில்லாத காகிதப்பூவை அரசு சூட்டியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com