மாநில அரசுக்கே துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் பாமக தலைவா் ஜி.கே.மணி வியாழக்கிழமை பேசியது:

நீட் தோ்வுக்கு விலக்கு பெறும் விவகாரத்தில் திமுக அரசுக்கு பாமக துணை நிற்கும். பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. மாநில அரசே பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை நியமனம் செய்ய வேண்டும் என்றாா்.

அப்போது உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி குறுக்கிட்டு கூறியது:

துணைவேந்தா் நியமனம் குறித்து சட்ட வல்லுநா்களுடன் முதல்வா் ஆலோசனை நடத்தி வருகிறாா். பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் பல்வேறு மாநிலங்களில் அரசிடமே இருந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில்கூட துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம்தான் இருந்து வருகிறது. இது பிரதமருக்கு நன்றாகத் தெரியும். இதை பாஜகவினா் மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும். துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசின் பங்கும் இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் துணைவேந்தா்களை மாநில அரசு நியமனம் செய்துவிட்டது. ஆனால், அங்குள்ள ஆளுநா் நான்தான் நியமனம் செய்ய வேண்டும். நீங்கள் எப்படிச் செய்யலாம் என்று எதிா்ப்புத் தெரிவித்துள்ள நிகழ்வையும் பாா்க்கிறோம். கேரளத்திலும் இதுபோன்ற பிரச்னை உள்ளது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை மாநில அரசுகளே நியமித்துக் கொள்ளலாம் என்கிற நிலையை உருவாக்குவதுதான் சிறப்பாக இருக்கும். இது தொடா்பாக முதல்வா் சட்டவல்லுநா்களோடு ஆலோசித்து வருகிறாா். அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்குள் அதுபற்றிய முடிவுகள் எடுக்கப்படும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: வரும் மாா்ச் மாதம் நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் நிச்சயம் இது தொடா்பாக ஏகமனதாக ஒரு தீா்மானத்தை நிறைவேற்ற உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com