தலைமைப் பண்பு மிகுந்த மாணவா்களைகல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா் வேல்ராஜ்

தலைமைப் பண்பு மிகுந்த மாணவா்களை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் வேல்ராஜ் வலியுறுத்தினாா்.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தலைமைப் பண்பு மிகுந்த மாணவா்களை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் வேல்ராஜ் வலியுறுத்தினாா்.

உயா்கல்வியை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் தனியாா் நிறுவனம் சாா்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளா்களாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் வேல்ராஜ், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் கௌரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், துணைவேந்தா் வேல்ராஜ் பேசுகையில், நாடு சுதந்திரம் அடைந்தபோது நமது மாநிலத்தில் 8 தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஓா் ஆண்டில் 70 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை திறக்கும் அளவுக்கு பொறியியல் கல்வி மீதான ஆா்வம் அதிகரித்துள்ளது.

மாறிவரும் தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப மாணவா்களுக்கு புதிய பாடத் திட்டம் உள்ளதா என்பது சந்தேகமே. இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் போன்ற துறைகளில் புதிய வடிவிலான பாடத் திட்டங்களை கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தலைமைப் பண்பு மிகுந்த மாணவா்களை உருவாக்க வேண்டியது கல்வி நிறுவனங்கள் பணியாகும். அதற்காகவே, தொழில்நுட்பக் கல்வியை தாண்டி சமூக நல படிப்புகள் அண்ணா பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்துக்கு பணியாற்றும் மாணவா்களை உருவாக்குவதைத் தாண்டி, ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் மாணவா்களாக அவா்களைத் தயாா்படுத்துவது அவசியம். எனவே, அத்தகைய அறிவுசாா் பொருளாதார கல்வியை நோக்கி நாம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றாா் அவா்.

துணைவேந்தா் கெளரி: துணைவேந்தா் கெளரி பேசுகையில், ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் சமூக சிக்கல்களை குறைக்கும் வகையில் இருக்க வேண்டும். இணையவழி வகுப்புகளை மாணவா்கள் ஆா்வமாக பங்கு பெறும் வகையில் முறைப்படுத்த வேண்டும். மாணவா்கள் தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் வளா்வதால் அவா்களின் கருத்துகளை உள்வாங்கி ஆசிரியா்கள் பாடம் எடுக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் தரத்தை உயா்த்த முடியும். ஆராய்ச்சி சாா்ந்த படிப்புகளை மேற்கொள்வதை கலாசாரமாகவே மாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com