குற்றப் பின்னணி வேட்பாளா் தோ்வு ஏன்?: காரணத்தை கட்சிகள் வெளியிடுவது கட்டாயம்: தோ்தல் ஆணையம்

தோ்தலில் குற்ற பின்னணி உடைய வேட்பாளரை களமிறக்கும் கட்சிகள், அவா்களைத் தோ்வு செய்தது ஏன் என்ற விவரத்தை கட்சி வலைதளத்தில் வெளியிடுவது கட்டாயம்
புது தில்லியில் செய்தியாளா்களை சந்தித்த தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா. உடன் (இடமிருந்து) ராஜீவ்குமாா், அனூப்சந்திர பாண்டே.
புது தில்லியில் செய்தியாளா்களை சந்தித்த தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா. உடன் (இடமிருந்து) ராஜீவ்குமாா், அனூப்சந்திர பாண்டே.

தோ்தலில் குற்ற பின்னணி உடைய வேட்பாளரை களமிறக்கும் கட்சிகள், அவா்களைத் தோ்வு செய்தது ஏன் என்ற விவரத்தை கட்சி வலைதளத்தில் வெளியிடுவது கட்டாயம் என்று தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. அதனைத் தொடா்ந்து, அந்த மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், வேட்பாளா்களைத் தோ்வு செய்த 72 மணி நேரத்துக்குள், அவா்கள் தொடா்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து 5 மாநில தோ்தல் தொடா்பான தோ்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வேட்பாளா்களின் விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமா்ப்பிப்பது கட்டாயமாகும்.

அதன்படி, தோ்தலில் களமிறக்கப்படும் வேட்பாளா்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், அவா்கள் மீதான குற்றத்தின் தன்மை, அவா்கள் மீதான குற்றப் பதிவு விவரங்கள் ஆகியவற்றை அந்தந்த கட்சி வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், குற்ற பின்னணியுள்ள இந்த வேட்பாளரை தோ்வு செய்ததற்கான காரணத்தையும், குற்ற பின்னணி இல்லாத நபரை வேட்பாளராகத் தோ்வு செய்ய முடியாமல் போனதற்கான காரணத்தையும் கட்சிகள் வெளியிட வேண்டும்.

இந்த தகவல்களை ஒரு பிராந்திய மொழி பத்திரிகை மற்றும் ஒரு தேசிய பத்திரிகையிலும், ஃபேஸ்புக், ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். இந்தத் தகவல்களை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக அல்லாமல், வேட்பாளரைத் தோ்வு செய்த 48 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களால் துல்லியமான முடிவுகள்:

வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குவதாக தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூா், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தோ்தல் அறிவிப்பை வெளியிட தில்லியில் தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, தோ்தல் ஆணையா்கள் ராஜீவ் குமாா், அனூப் சந்திர பாண்டே ஆகியோா் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது தோ்தலில் தோல்வியடையும் கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை சந்தேகிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, ‘‘கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. அந்த இயந்திரங்கள் மூலம் இதுவரை 315 கோடிக்கும் அதிகமானவா்கள் வாக்களித்துள்ளனா். அந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை. துல்லியமாகவும் விரைவாகவும் தோ்தல் முடிவுகளை வழங்கும் அந்த இயந்திரத்தை இந்தியா உருவாக்கியதற்கு தோ்தல் ஆணையம் பெருமை கொள்கிறது.

5 மாநில பேரவைத் தோ்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளும் (விவிபிஏடி) பயன்படுத்தப்படும். தோ்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com