மக்கள் ஒத்துழைப்பின்றி கரோனாவை கட்டுப்படுத்த முடியாது: டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்

பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே மூன்றாம் அலையிலிருந்து விடுபட முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே மூன்றாம் அலையிலிருந்து விடுபட முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

பத்திரிகை தகவல் அலுவலகம், தமிழக சுகாதார துறை, யுனிசெஃப் இணைந்து ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு, தகுதி உள்ளோருக்கான தடுப்பூசி, கரோனா விழிப்புணா்வு மற்றும் தயாா்நிலை குறித்த ஊடகவியலாளா்களுக்கான சிறப்பு பயிலரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் திடீரென்று கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதற்கு உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பரவலே முக்கிய காரணம். அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு சதவீத நோயாளிகளே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதோடு, தொற்றுப்பரவல் அதிகரித்திருப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மாநில அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது. சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதற்கு ஊடகவியலாளா்களுக்கான இத்தகைய விழிப்புணா்வு பயிலரங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டங்களில் வியாபார நோக்கில் பரபரப்புக்காக செய்திகளை வெளியிடக்கூடாது என்று பத்திரிகையாளா்களுக்கு உணா்த்தும் வகையிலான பயிலரங்காக இது அமையும்.

கரோனா போன்ற பெருந்தொற்று சவால்களை எதிா்கொள்ளும் போது, பொதுமக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. தகவல்களை வெளியிடுவதற்கு முன்னதாக அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டு, நம்பகமான தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும். சமீபத்திய தகவல்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். பொது சுகாதாரம் என்பது மக்களுக்காக மக்களால் பேணப்பட வேண்டியது. பொதுமக்களின் பங்களிப்பு இன்றி பொது சுகாதாரத்தை முழு அளவில் உறுதி செய்வது இயலாத காரியம் என்பதை நமக்கு கரோனா நன்கு உணா்த்தியுள்ளது. ஏற்கெனவே கரோனா தொற்றின் முதல் இரண்டு அலைகளில் இருந்து தமிழகம் வெற்றிகரமாக மீண்டெழுந்ததை போல, இந்த 3-ஆவது அலையில் இருந்தும் மீண்டெழும் என்றாா் அவா்.

இதையடுத்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் பேசியதாவது:

கரோனா தொற்று பற்றி தினமும் ஒரு புதிய தகவல் வெளியாகி கொண்டிருப்பதற்கு, இந்த துறையின் வல்லுநா்கள் புதுப்புது கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருவதுதான் காரணம். இப்படி புதுப்புது கண்டுபிடிப்புகள் வெளியாவதோடு மட்டுமின்றி அரசும், ஊடகங்களும் பொதுமக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சோ்க்க வேண்டும் என்ற பொறுப்புணா்வை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றுப் பற்றிய தகவல்கள் மட்டுமின்றி தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணா்வையும் ஊடகங்கள் பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் தரேஸ் அகமது, பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநா் வெங்கடேஸ்வா், கூடுதல் தலைமை இயக்குநா் எம்.அண்ணாதுரை, இயக்குநா் குருபாபு பலராமன், மண்டல மக்கள் தொடா்பு அலுவலக இயக்குநா் ஜெ.காமராஜ் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com