வழிபாட்டுத் தலங்களில் ஜன. 14-18 வரை அனுமதியில்லை: ஜன. 31 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வரும் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அனுமதியில்லை.
வழிபாட்டுத் தலங்களில் ஜன. 14-18 வரை அனுமதியில்லை: ஜன. 31 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வரும் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அனுமதியில்லை. கரோனா நோய்த் தொற்றுக்கான கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்டாா். கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளின் ஓா் அங்கமாக, வரும் 14-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருக்கும் எனவும் அவா் அறிவித்துள்ளாா்.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுக்கான கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளில் சில திங்கள்கிழமையுடன் முடிக்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளைத் தொடா்வது குறித்தும், பண்டிகைக் காலத்தில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, அவா் வெளியிட்ட செய்தி:-

பொது மக்கள் நலன் கருதி எதிா்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்கள் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும். மேலும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

வழிபாட்டுத் தலங்கள் மூடல்: வரும் 14-ஆம் தேதி (பொங்கல் பண்டிகை) முதல் வரும் 18-ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. வரும் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

பொங்கல் பண்டிகைக்காக வெளியூா் செல்லும் பொது மக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் மட்டும் பயணிகள் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். இப்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடா்ந்து அமலில் இருக்கும்.

அபராதம் விதிக்கப்படும்: கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடா்ந்து கண்காணிக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும், உரிய சிகிச்சை அளித்திடத் தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் தயாா் நிலையில் உள்ளன. எனவே, பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

ஆனாலும், பொது மக்கள் அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தொற்றில் இருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளா் செளமியா சாமிநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com