நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு
நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு


 
நாமக்கல்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற குடைவரைக் கோயிலான அரங்கநாதர் சுவாமி, ரங்கநாயகி தாயார் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இங்கு பரமபத வாசல் திறக்கப்படுவதுடன், அதன் வழியாக உற்சவ மூர்த்திகளின்றி சுவாமியின் ஜடாரியை அர்ச்சகர் ஒருவர் தலையில் கொண்டு வரும் வைபவம் நடைபெறும். அதன்படி வைகுண்ட ஏகாதசி நாளான வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல்  திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அர்ச்சகர்கள் ஜடாரியை சுமந்தபடி பரமபத வாசல் வழியாக சுற்றி வந்தனர். விழாவில் முக்கிய பிரமுகர்கள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. காலை 6 மணிக்கு பிறகு தான் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

சயனக் கோலத்தில் அரங்கநாதர் சுவாமி காட்சி அளித்தார். கோவிந்தா முழக்கங்களுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். கரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்த பக்தர்கள், இலவச தரிசனம் என்ற வகையில் ஒரு மணி நேரத்துக்கு 250 பக்தர்கள் வீதம் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் நாமக்கல் பேருந்து நிலையம் செல்லும் சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.    

இதேபோல் ராசிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்வில்ல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயில், சேந்தமங்கலம் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பள்ளிபாளையம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com