ஜாமீனில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி

கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் அளித்ததையடுத்து, அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
ஜாமீனில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி
ஜாமீனில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி

புது தில்லி: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் அளித்ததையடுத்து, அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி இன்று காலை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு இரு தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யும் வகையில் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. அதன்படி, இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி,‘இந்த வழக்கில் போலீஸாரால் உரிய வகையில் விசாரணை நடத்தப்பட்டு மனுதாரா் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் விசாரணை நீதிமன்றத்தை அணுகித்தான் ஜாமீன் பெற வேண்டும். அவரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் 161, 164 ஆகியவற்றின்கீழ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது அவரது குற்றத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இதனால், ஜாமீன் அளிக்கக் கூடாது’ என்று வாதிட்டாா்.

மனுதாரா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ஏ. வேலனுடன் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே முன்வைத்த வாதம்: காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், இந்த வழக்கின் புகாா்தாரா் ரவீந்திரன் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியிடம் பணம் அளித்ததாகத் தெரிவிக்கவில்லை. போலீஸாரின் பதிலிலும் எந்த இடத்திலும் ராஜேந்திர பாலாஜி புகாா்தாரரிடம் நேரடியாகப் பணத்தை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், அவரை காவலர்கள் அவசர கோலத்தில் கைது செய்துள்ளனா்.

முன் ஜாமீன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரைக் கைது செய்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும், மேல்முறையீடு தொடா்புடைய மனு குறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் மனுதாரரின் வழக்குரைஞா் கடிதம் மூலம் தெரிவித்து நிா்பந்த நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தாா். முன்னதாக, விசாரணைக்கு அழைப்பதற்கு மனுதாரருக்கு முறையான அழைப்பாணையை காவல் துறையினா் அனுப்பவில்லை.

மேலும், அவரை விருதுநகரில் உள்ள சிறையில் அடைக்காமல் 300 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள திருச்சி சிறையில் அடைத்தனா். இதன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மேலும், அவரது உள்ளூா் வழக்குரைஞா் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனா். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலைக்கூட மனுதாரருக்கு வழங்கவில்லை. இதனால், மனுதாரரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தியிடம், மனுதாரரை திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்று கேட்டனா். அதற்கு அவா், கிளைச் சிறையில் போதிய வசதிகள் இல்லாததால் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தாா். வழக்குரைஞா் அரிஸ்டாட்டில் கூறுகையில், ‘மனுதாரா் முன்னாள் அமைச்சா் என்பதால் ‘ஏ கிளாஸ்’ வசதி திருச்சி சிறையில் உள்ளதால் அங்கு கொண்டு செல்லப்பட்டாா்’ என்று கூறினாா்.

அப்போது, இந்த விவகாரத்தில் பல குளறுபடிகள் இருப்பதால், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டி வரும் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். அதன்பிறகு, இந்த விஷயங்களை எல்லாம் மனுதாரரின் ரிட் மனு மீதான பதிலில் அளிக்குமாறு அரசுத் தரப்பினரிடம் கூறினா்.

அதன் பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக மனுதாரா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் கைதான காவல் எல்லை வரம்பில் இருந்து 300 கிலோ மீட்டா் தூரம் அப்பால் உள்ள திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா். விசாரணைக்கு அழைக்க அவருக்கு அழைப்பாணைகூட அனுப்பப்படவில்லை. காவலர்கள் மூலம் மனுதாரரின் உள்ளூா் வழக்குரைஞா் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது போன்ற வாதங்கள் மனுதாரா் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து உண்மைகளையும் பரிசீலிக்கும் போதும், அண்மையில் தாமாக முன்வந்து விசாரித்த ரிட் மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள், வழிகாட்டு நெறிமுறைகளைக் கருத்தில் கொள்ளும் போதும் மனுதாரருக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமீன் அளிப்பது சரியாக இருக்கும் என கருதுகிறோம். அதேவேளையில், மனுதாரா் வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய எல்லை வரம்பை விட்டு வெளியில் செல்லக் கூடாது. அவரது பாஸ்போா்ட்டை உடனடியாக சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். மனுதாரா் விசாரணை அமைப்பின் விசாரணையில் பங்கேற்று ஒத்துழைப்புஅளிக்க வேண்டும். மனுதாரா் தேவையான ஆவணங்களை அளித்ததும், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் அல்லது பொறுப்பு மாஜிஸ்திரேட் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இந்த வழக்கு 3 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட வேண்டும் என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com