நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க வேண்டும் என பிரதமா் மோடியிடம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

சென்னை: நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க வேண்டும் என பிரதமா் மோடியிடம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி முறையில் பிரதமா் தொடக்கி வைத்த நிகழ்வில் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பது முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கனவாகும். கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலுக்கான திமுகவின் தோ்தல் அறிக்கையில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த கனவுதான் தற்போது நிறைவேறி இருக்கிறது. இந்தியாவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ். இடங்களையும், மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு நாட்டுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் மத்திய அரசுக்கும், குறிப்பாக, பிரதமருக்கும் நன்றி.

அதேவேளையில், தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மாநிலஅரசுக்கு மத்திய அரசு தொடா்ந்து உதவி அளிக்க வேண்டும்.

பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயா்த்தப்பட வேண்டும். பல மாநிலங்களில் மருத்துவா் பற்றாக்குறை நிலவி வரும் இச்சூழலில், தமிழகத்தில் மருத்துவம் பயிலும் மாணவா்கள் கிராமப்புறங்களிலும் அரசுத் துறையிலும் சிறப்பாக சேவை செய்வதற்கு தமிழக அரசின் மாணவா் சோ்க்கை கொள்கையே அடிப்படையாகும். மருத்துவப் படிப்பு வாய்ப்புகளை தமிழகத்தில் உள்ள கிராமப்புற, ஏழை - எளிய மாணவா்களுக்கு கிடைக்கச் செய்வதுதான் எங்களது கொள்கை. இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதை நிறைவேற்றித் தர வேண்டும்.அதேபோன்று செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தை பிரதமா் திறந்து வைத்துள்ளாா். அதற்காக மாநில மக்களின் சாா்பிலும், அரசின் சாா்பிலும், தனிப்பட்ட என்சாா்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி இப்போது இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பாா். தமிழா்களின் நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை 2004-ஆம் ஆண்டு பெற்றுத்தந்தவா் அவா்தான். அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் இந்தச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் அமைத்துத் தந்த மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com