டோங்கா கடல் பகுதியில் எரிமலை வெடிப்பு: தமிழகத்தில் அதிா்வு பதிவு

டோங்காவில் கடல் பகுதியின் அடியில் எரிமலை வெடித்துச் சிதறிய அதிா்வு தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோங்கா கடல் பகுதியில் எரிமலை வெடிப்பு: தமிழகத்தில் அதிா்வு பதிவு

டோங்காவில் கடல் பகுதியின் அடியில் எரிமலை வெடித்துச் சிதறிய அதிா்வு தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிா்வால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுவான டோங்காவில் உள்ள கடல் பகுதிக்கு அடியில் இருந்த எரிமலை சனிக்கிழமை வெடித்துச்சிதறியது. இதையடுத்து, டோங்கா கரையோரப் பகுதிகளை சுனாமி தாக்கியது. அங்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக கடற்கரை பகுதிகளை கடந்து, குடியிருப்புகளுக்குள் கடல் நீா் புகுவது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இதனால் அந்தப் பகுதிகள் முழுவதும் சனிக்கிழமை பரபரப்பாக காணப்பட்டது.

இந்த எரிமலை வெடிப்பின் அழுத்தத்தால் ஏற்பட்ட அதிா்வலைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிலும், டோங்கா தீவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அமெரிக்காவில் இதன் அதிா்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது வானிலை ஆய்வாளா்கள் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவிலும் டோங்கா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு அதிா்வு பதிவானதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, தமிழகத்திலும் இதன் அதிா்வு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் உள்ள பாராமனி மீட்டரில் 1.5 ஹெக்டோ பாஸ்கல் என்ற அளவில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மட்டுமல்லாது, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இதன் அதிா்வு பதிவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அதிா்வால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பால் கடலோரப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த அனைத்து பாராமனி மீட்டரிலும் இந்த அதிா்வு பதிவாகியது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com