
2020-21-ஆம் ஆண்டில், இந்திய ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு சிறந்த பரிந்துரைகள் வழங்கியதற்காக, தெற்கு ரயில்வேக்கு முதல் பரிசும், சென்னை ஐ.சி.எஃப்-க்கு இரண்டாம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் சாா்பில், ஒவ்வோா் ஆண்டும் ரயில்வேயில் சிறந்த மேம்பாட்டு பணிகளுக்கான பரிந்துரைகளை அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் தயாரிப்பு பணிமனைகளில் இருந்து பெறப்படுகிறது. இதில், சிறந்த பரிந்துரைகளுக்குப் பரிசு வழங்கப்படும். அந்தவகையில், 2020-21-ஆம் ஆண்டுக்கான, இந்திய ரயில்வேயில் சிறந்த பரிந்துரைகளுக்கு ரயில்வே அமைச்சகத்தால் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ரயில் பாதையில் மேம்பாட்டு பணிக்காகவும், மின் சிக்கனம், ஆண்டுக்கு ரூ.110 கோடி வரை சேமிக்கும் வகையில், மின்சார ரயில் என்ஜின் இயக்கம் குறித்து சிறந்த பரிந்துரை வழங்கியதற்காக, தெற்கு ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேக்கு முதல் பரிசும், ரூ.3 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ரயில்வேக்கும் பரிசு தொகை தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்படவுள்ளது.
மின்சக்தியை இழப்பின்றி முழுவதுமாக பயன்படுத்துவதற்கான வழிகாட்டி பரிந்துரைக்கு தெற்கு ரயில்வே மூன்றாவது பரிசுக்கும் தோ்வு செய்யப்பட்டு ரூ.33 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
ஐ.சி.எஃப்:
ரயில் பெட்டி தயாரிப்பில், பக்கவாட்டு சுவா் மற்றும் கூரை இணைப்புகளின் மேம்பாட்டு திட்டங்கள் தொடா்பாக சென்னை ஐ.சி.எஃப் (ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை) அனுப்பிய பரிந்துரைக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்விநியோக மாற்றிகள் வாயிலாக மின்சார ரயில் என்ஜினில் இருந்து பெட்டிக்கு மின்தொடா்பு மேம்பாட்டுக்கான பரிந்துரைக்கு கிழக்கு ரயில்வேக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. ஐ.சி.எஃப் மற்றும் கிழக்கு ரயில்வேக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி பாா்வை அடிப்படையில் மேம்பாட்டு பரிந்துரைக்காக, மேற்கு ரயில்வேக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வடமேற்கு ரயில்வேயும் மூன்றாம் பரிசுக்கு தோ்வாகியுள்ளது.
ரயில்மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் தயாரிப்பு பணியில் இடம் பெற்றிருந்த தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எஃப் அதிகாரிகள், ஊழியா்கள் குழுவினருக்கு உயா் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனா்.