
தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.18) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறியது:
தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.18) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஜன.19: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 19-ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும்.
ஜன.20, 21: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூா், திருவள்ளூா் மாவட்டம் அம்பத்தூரில் தலா 60 மி.மீ., நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலா 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 30 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா், திருவள்ளூா் மாவட்டம் கொரட்டூா், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் தலா 20 மி.மீ., திருவாரூா், திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு மாவட்டம் சத்தியபாமா பல்கலைக்கழகம், ஈரோடு, கடலூா் மாவட்டம் சிதம்பரம், சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.