
மானாமதுரை ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் மூலவர் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை தைப்பூச விழா நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
மானாமதுரை புறவழிச்சாலையில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத வழிவிடு முருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மூலவர் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மூலவர் முருகனுக்கும உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
மானாமதுரையில் ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ பூர்ண சக்கர விநாயகர் கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதி, ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, தாயமங்கலம் சாலையில் அமைந்துள்ள சுப்ரமணியர் கோயில், இடைக்காட்டூர் பாலமுருகன் கோயில் உள்பட மானாமதுரை பகுதியில் உள்ள பல முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயில்களில் உள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. கிராமப் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், திருப்புவனம் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது. முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.