
எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா
எடப்பாடி: தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எடப்பாடி அடுத்த கள்ளபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஞான கந்தசாமி திருக்கோவிலில் கடந்த வாரம் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஞான கந்தசுவாமி சன்னிதானத்தில் மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 108 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஞான கந்தசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் சுவாமிக்கு காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தற்போது கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
அருள்ஞான பாலமுருகன் ஆலயம், கொங்கணாபுரம் வெள்ளக்கல் மலைமீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், க.புதூர் கந்தசாமி திருக்கோயில் உள்ளிட்ட முருகப்பெருமான் ஆலயங்களிலும் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.