
வைத்தீஸ்வரன் கோயில்
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தை மாத உத்ஸவ பந்தகால் முகூர்த்தம் செவ்வாய்க்கிழமை தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் கற்பகவினாயகர், செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு நடைபெறும் உத்ஸவமான தைமாத உத்ஸவம் பந்தகால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. முன்னதாக கற்பகவினாயகர் சன்னதி முன்பு பந்தகாலுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பந்தகால்முகூர்த்தம் நடந்தது.
தொடர்ந்து வைத்தியநாதசுவாமிக்கு பசலி புது கணக்கு தொடங்குதல், உண்டியல் பூஜைகள் செய்து காணிக்கை செலுத்தி தொடங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று பூஜித்து திருக்கரத்தால் தொடங்கிவைத்தார்.
இதில் கோயில் கட்டளை விசாரனை திருநாவுக்கரசுத்தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றார். வரும் வெள்ளிக்கிழமை கற்பக விநாயகருக்கு 8 நாள் உத்ஸவம் தொடங்கவுள்ளது.