'கரோனா கட்டுக்குள் வரும்வரை டாஸ்மாக்கை மூட வேண்டும்'

கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 
எடப்பாடி கே.பழனிசாமி (கோப்புப் படம்)
எடப்பாடி கே.பழனிசாமி (கோப்புப் படம்)

கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்தே வருகிறது.  இதனை அதிமுக சார்பில் சுட்டிக்காட்டிய போதெல்லாம், கரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை திமுக அரசு வெளியிட்டது.

பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நோய்த் தொற்று அதிகரிக்கும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   

தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக திமுக  அரசே செய்திக் குறிப்பினையும் வெளியிடுகிறது. 

ஆனால், உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களும், மருத்துவர்களும் தகவல் தெரிவிக்கின்றனர்.  

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறும்போது, டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால்தான் கரோனா தொற்று பரவுகிறது என்று மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தங்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். 

ஆனால், இன்றைக்கு திமுக அரசின் வாக்குமூலப்படி, தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?  

டாஸ்மாக், பார்களின் முன்பு நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.  

தமிழக மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்த விடியா திமுக அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.  

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று திமுக செயல்படுகிறது. 

தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com