பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.1,250 கோடி வீண்: அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.1,250 கோடி வீண்: அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.1,250 கோடி மதிப்பிலான மளிகைப் பொருள்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திமுக அரசால் வழங்கப்பட்டன. 

பொங்கல் தொகுப்பில் இருந்த பெரும்பாலான மளிகைப் பொருள்கள் சாப்பிடுவதற்கே லாயக்கற்றது என்றும், இதில் உள்ள பொருள்களை சாப்பிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது என்றும் மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாக கூறினார். 

அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனம் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தல், உடலுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய பொருள்களை விநியோகம் செய்தல், கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை விநியோகம் செய்தல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுபோல் உள்ளது.

அமைச்சர் மேலும் கூறுகையில், "சில இடங்களில் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதை மாற்றிக் கொடுத்ததோடு, அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று கூறினார். இது சப்பைகட்டும் செயல்.

உண்மை நிலை என்னவென்றால், பெரும்பாலான இடங்களில் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. அமைச்சரின் பதிலைப் பார்க்கும்போதே இதில் முறைகேடு நடந்து இருப்பது என்பது ஊர்ஜிதமாகிறது.

கடைசியாக, "அதிமுக ஆட்சியில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ரூ.45-க்கு வாங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் 50 கிராம் முந்திரி, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் ரூ.62-க்கு வாங்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ பருப்பு ரூ.120.50 காசுக்கு வாங்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் ரூ.78-க்கு வாங்கப்பட்டதாகவும், இதில் மட்டும் ரூ.74 கோடி மிச்சப்படுத்தப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். 

ஒரு நிறுவனம் ஒரு பொருளை 5 அல்லது ரூ.10 குறைத்துக் கொடுக்க ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ரூ.42 குறைத்து கொடுக்க ஒப்புக்கொள்கிறது என்றால் அதனுடைய தரம் எப்படி இருக்கும், எடை எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும், அந்த நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கிய ஆட்சியாளர்களின் நோக்கம் என்ன என்பதையும் அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

அதனால்தான் 2022 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு குறித்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

இதுகுறித்து முதல்வர், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் இன்று விவாதிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், தவறு நடந்து இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தன. மக்கள் பணம் மக்களைச் சென்றடைந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்கள்.

தற்போதைய திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொருள்கள் எதுவுமே மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. இந்தப் பொருள்களை பயன்படுத்தி பல இடங்களில் ஒவ்வாமை ஏற்பட்டது போல தங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவத்திற்கு வேறு செலவழிக்க வேண்டுமே என்று பயந்து மக்கள் அவற்றை பயன்படுத்தவில்லை. மொத்தத்தில் மக்களின் பணம், அரசினுடைய பணம் கிட்டதட்ட ரூ.1,250 கோடி வீணடிக்கப்பட்டு விட்டது.

எனவே, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருள்கள் ஒவ்வொன்றும் யாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன? ஒரே பொருள் இரண்டு, 3 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதா? அப்படி என்றால் ஏன் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டது?

தமிழ்நாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியில் கலந்து கொண்டதா? கலந்து கொண்டது என்றால் எந்தெந்த நிறுவனங்கள் கலந்து கொண்டன? அவர்கள் குறிப்பிட்ட விலை என்ன? பொருள்களின் தரம் மற்றும் எடை குறித்த நிபந்தனைகள் ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? தரம் மற்றும் எடை பரிசோதனை செய்யப்பட்டதா? தரமற்ற, மட்டமான பொருள்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒப்பந்ததார்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது? இன்னும் எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com