ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு சிறந்த பரிசு காரா? அரசு வேலையா?

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு சிறந்த பரிசு கார் தானா? அரசு வேலையில்லையா?
ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு சிறந்த பரிசு கார் தானா? அரசு வேலையில்லையா?


பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போன்ற பெயர்களிலும், வட மாவட்டங்களில் எருதுவிடுதல் என்ற பெயரிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

வழக்கமாக, தைப் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் நாளில் பாலமேட்டிலும், அதன் மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். 

நூற்றுக்கணக்கான காளைகளை, பல நூற்றுக்கணக்கான காளையர்கள் அடக்கி, பரிசுகளை வெல்வதும், காளையர்களுக்கு அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்குவதும் வழக்கம். அதிகப்படியான மாடுகளைப் பிடித்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக பரிசுகளும் அளிக்கப்படும்.

மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு ஆரம்பகாலத்தில் வேட்டி, துண்டு, குடம் போன்ற பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. இது படிப்படியாக உயர்ந்து தற்போது கார், இரு சக்கர வாகனம், தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் என மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகப் பார்க்கப்பட்டாலும், ஜல்லிக்கட்டுப் போட்டி வெற்றியாளர்களுக்கு காரும், இருசக்கர வாகனமும் சரியான பரிசுதானா என்ற கேள்வி கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே எழுந்துள்ளது.

வெறும் குடம், கட்டில் போன்றவை பரிசுப் பொருள்களாகக் கொடுக்கப்பட்ட நிலை மாறி, தற்போது கார் பரிசளிக்கப்படுவதே, ஜல்லிக்கட்டுப் போட்டியின் புகழை உச்சிக்குக் கொண்டு செல்வதாக சிலர் கூறினாலும், மாடுபிடி வீரர்களும் சரி, மாட்டின் உரிமையாளர்களும் சரி, பெரும்பான்மையானோர் வறுமையான குடும்ப பின்னணியைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் கார், அவர்களால் பயன்படுத்த முடியாத நிலையே இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டு அவனியாவுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் என்ற விருதைப் பெற்ற 20 வயதாகும் ஆர். கார்த்திக்குக்கு வழங்கப்பட்ட பரிசு கார். இந்த கார், அவரது வீரத்திற்குக்கு கிடைத்த பரிசு. வாழ்நாளெல்லாம் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயம்.

விலை உயர்ந்த காரைப் பரிசாகப் பெற்றது பெரும் மகிழ்ச்சியை அளித்தபோதும், குடும்ப வறுமையில், இந்த காரை விற்றுத்தான், அவர் தன்னுடைய மற்றும் தனது சகோதரர்களின் கல்விச் செலவை மேற்கொள்ளும் நிலையில் உள்ளார். இது குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், 24 மாடுகளைப் பிடித்து, சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார் கார்த்திக். அவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காரை விற்றால்தான் அவர் தனது கல்விச் செலவை மேற்கொள்ள முடியும்.

இதுபோன்ற குடும்பப் பின்னணி கொண்ட மாடுபிடி வீரர்களுக்கு, தமிழக அரசு, அரசுப் பணிகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு புது வாழ்வும், ஒரு கௌரவமும் கிடைக்கும் என்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் பலரும், தங்களது உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தங்களுக்கு அரசுப் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது கடந்த சில ஆண்டுகளாகவே, வெற்றியாளர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகவே உள்ளது. இதன் மூலம், இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி இளைஞர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும், மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளை வளர்ப்பவர்களுக்கும் நல்வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடர்ந்து நடத்துவதன் பயனை இது மிக விரைவாகவும் நிச்சயமாகவும் உறுதி செய்யும் என்றும் கூறுகிறார்கள்.

இதற்கிடையே, ஏழைக் குடும்பப் பின்னணியை கொண்ட இளைஞர்களுக்கு காருக்கு பதிலாக, வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு முன் வரலாம் என்றும், விழா ஏற்பாட்டளர்கள் மாற்றி யோசிக்கலாம் என்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தங்களது யோசனையை முன் வைத்துள்ளனர்.

இந்தக் கருத்தை முற்றிலும் மறுதலிக்கிறார் பிரபாகரன். 2022ஆம் ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கான விருதை வென்ற பிரபாகரனின் சிந்தனை வேறாக உள்ளது. காரை பரிசாக வென்றதன் மூலம், கிராமத்தில் பெரிய மரியாதை கிடைத்ததோடு, எனது வாழ்வாதாரமாகவும் கார் மாறியுள்ளது என்கிறார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பரிசாக காரையும் 2022ஆம் ஆண்டு இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனத்தையும் வென்றவர்.

குடிசை வீட்டில் வசித்து வரும் பிரபாகரன், தற்போது காரை வாடகைக்கு ஒட்டி, தனது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்கிறார். 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக போராடியவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தாங்களாக முன் வந்து பல பரிசுகளை வழங்கி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுப் போட்டியின் ஆரம்பகால பரிசுப் பொருள்கள் குறித்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அமைப்பாளர் குழுவின் முன்னாள் தலைவர் ஜே. சுந்தர் ராஜன் கூறுகையில், ஆரம்பகாலத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துண்டு, வேட்டி போன்றவைதான் பரிசாக வழங்கப்பட்டன. அதன்பிறகு, போட்டி நடைபெறும் பகுதிகளுக்கு அருகே இருக்கும் சில தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருள்களை விளம்பரத்துக்காக பரிசாக வழங்க முன் வந்தன. அவை முற்றிலும் விளம்பரத்துக்காகவே இருந்தன. அதன்பிறகுதான், பரிசுப் பொருள்களின் மதிப்புக் கூடியது.

இங்கிருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் கனவு வீடு கட்டுவது, கார் வாங்குவதாக இருக்கும். பெரும்பாலான மாடுபிடி வீரர்கள் நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்த பரிசுப் பொருள்கள் அவர்களுக்கு பெருமைசேர்க்கும் விதமாக உள்ளது. அனைத்து இளைஞர்களும் விவசாயம் செய்வதில்லை. பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள் என்கிறார்.

மேலும், அரசு வேலை என்பது மாடுபிடி வீரர்களின் கோரிக்கையாக இருப்பது குறித்து கேட்டதற்கு, இது குறித்து ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்துப் பேசிய தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும் என்று விளக்கமளித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com