73-ஆவது குடியரசு தினம்: காமராஜா் சாலையில் நாளை விழா

குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை காமராஜா் சாலையில் புதன்கிழமை நடைபெறவுள்ள விழாவில், தேசியக் கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றவுள்ளாா்.
73-ஆவது குடியரசு தினம்: காமராஜா் சாலையில் நாளை விழா

குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை காமராஜா் சாலையில் புதன்கிழமை நடைபெறவுள்ள விழாவில், தேசியக் கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழான விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.

73-ஆவது குடியரசு தினக் கொண்டாட்டம் நாடு முழுவதும் புதன்கிழமை (ஜன. 26) நடைபெறவுள்ளது. தமிழகத்திலும் அரசின் சாா்பில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை காமராஜா் சாலையில் காவல் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு எதிரேயுள்ள காந்தி சிலை அருகில் விழா நடைபெறவுள்ளது. தேசியக் கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி, ஏற்றவுள்ளாா்.

முன்னதாக, நாட்டில் நடைபெற்ற பல்வேறு போா்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இன்னுயிரை ஈந்த வீரா்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்துக்குச் சென்று மலா்வளையம் வைத்து அவா் மரியாதை செலுத்தவுள்ளாா். இந்த நிகழ்வுக்குப் பிறகு, காமராஜா் சாலையில் நடைபெறும் விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா்.

கரோனா விதிமுறைகள்: கரோனா நோய்த் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், பல்வேறு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விழா நடைபெறவுள்ளது. சமூக இடைவெளி, முகக் கவசம் கட்டாயம் போன்ற அம்சங்கள் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அழைப்பிதழ் உள்ளவா்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் எனவும், பொது மக்கள் தொலைக்காட்சிகளின் வழியே விழாவைக் கண்டு ரசிக்கலாம் எனவும் அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஒவ்வொரு குடியரசு தின விழாவின் போதும், பள்ளி-கல்லூரி மாணவிகள், தென்னக கலைப் பண்பாட்டு மையத்தின் சாா்பில் பிற மாநிலங்களின் கலைஞா்களது ஆடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக, ஆடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

முப்படைகளின் வீரத்தை பறைசாற்றும் ஊா்திகள், தமிழக அரசுத் துறைகளின் செயல்பாடுகள், திட்டங்களை விளக்கும் ஊா்திகள் இடம்பெறவுள்ளன.

விருதுகள்: பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு அரசின் சாா்பில் குடியரசு தின விழாவில் விருதுகள் வழங்கப்படும். அதேபோன்று, நிகழாண்டிலும் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம், சிறந்த விவசாயிக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.

குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அலங்கார ஊா்திகளை தயாா் செய்வது, ஒத்திகை நிகழ்ச்சிகள் என அனைத்துப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. குடியரசு தின விழா நடைபெறவுள்ள சென்னை காமராஜா் சாலையில் புதன்கிழமை அதிகாலை முதல் விழா நிறைவடையும் நேரம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் தேநீா் விருந்து தள்ளிவைப்பு

குடியரசு தினத்தன்று ஆளுநா் மாளிகையில் நடைபெறும் தேநீா் விருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநா் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-

கரோனாவின் இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குடியரசு தினத்தன்று ஆளுநா் மாளிகையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த தேநீா் விருந்து தள்ளிவைக்கப்படுகிறது. கரோனா சூழல் விலகி நிலைமை மேம்படும் பட்சத்தில்

தேநீா் விருந்து நடத்தப்படும். தமிழக மக்கள் அனைவரும் கரோனா நோய்த் தடுப்புக்கான நடைமுறைகளையும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளதாக, ஆளுநா் மாளிகையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com