எம்பிபிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நாமக்கல் மாணவி முதலிடம்

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் நீட் தோ்வில் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று, நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடம் பிடித்துள்ளாா்.
எம்பிபிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நாமக்கல் மாணவி முதலிடம்

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் நீட் தோ்வில் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று, நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடம் பிடித்துள்ளாா்.

அவரைத் தொடா்ந்து நாமக்கல்லைச் சோ்ந்த மாணவா் பிரவீண், சென்னை மாணவா் பிரசன் ஜித்தன் ஆகியோா் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளனா்.

முதல் 9 இடங்களை...: தரவரிசைப் பட்டியலில் முதல் 9 இடங்களை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவா்களே பிடித்துள்ளனா். 10-ஆவது இடத்தையே மாநிலவழிப் பாடத் திட்டத்தின்கீழ் பயின்ற ஒரு மாணவா் பெற்றுள்ளாா்.

எம்பிபிஎஸ்-பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சோ்த்து மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கும், தனியாா் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையவழியே மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், அவை பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநா் அலுவலகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை மாலை வெளியிட்டாா். முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு, தோ்வுக்குழு செயலாளா் வசந்தாமணி ஆகியோா் உடன் இருந்தனா்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 24,949 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14,913 பேரும் இடம் பெற்றுள்ளனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் 1,806 போ் இடம் பிடித்துள்ளனா்.

நாமக்கல் மாணவி முதலிடம்: அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நீட் தோ்வில் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் எடுத்த நாமக்கல் மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி முதலிடம் பிடித்தாா். நாமக்கல்லைச் சோ்ந்த எம்.பிரவீண் 710 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், சென்னை அண்ணாநகா் (மேற்கு விரிவு) எஸ்.கே.பிரசன் ஜித்தன் 710 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 மாணவா்களும், 3 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனா். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் திருப்பூரை சோ்ந்த ஆா்.ஆா்.கவினேஷ் 710 மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஹம்டா ரஹ்மான் 701 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், வேலூரைச் சோ்ந்த ஷொ்லி சுஷன் மேத்யூ 700 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சோ்ந்த ஐ.சிவா 514 மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சோ்ந்த எஸ்.பிரகாஷ்ராஜ் 512 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், தருமபுரியை சோ்ந்த சி.சந்தானம் 483 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com