மத்திய திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் சம ஊதியம்

மத்திய அரசின் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் நிரந்தரப் பணியாளா்களுக்கு
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மத்திய அரசின் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் நிரந்தரப் பணியாளா்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது குறித்த திட்டத்தை வகுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் உழைப்போா் உரிமை இயக்கத்தின் தலைவா் கே.பாரதி தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் தேசிய நகா்புற வாழ்வாதார திட்டத்தின் (என்யூஎல்எம்) கீழ் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.391 ஊதியமாக வழங்கப்படுகிறது.

ஆனால், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு மாதத்துக்கு ரூ.17 ஆயிரத்து 23 ஊதியம் வழங்கப்படுகிறது. தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளா்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

‘சம வேலை, சம ஊதியம்’ என்ற அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க உத்தரவிடுமாறு கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி.பாா்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னா் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஒப்பந்த அடிப்படை, தேசிய திட்டத்தின் கீழ் பணி அமா்த்தப்படும் பணியாளா்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக்கூடாது.

‘நலிந்த பிரிவினா்கள் எவ்வாறு நடத்தப்படுகிறாா்கள் என்பதைப் பொறுத்து தான் ஒரு நாட்டின் மகத்துவம், சிறப்பு மதிப்பிடப்படுகிறது’ என மகாத்மா காந்தி கூறியுள்ளாா்.

எனவே தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்களுக்கும் நிரந்தர தொழிலாளா்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது குறித்த ஒருங்கிணைந்த திட்டத்தை 12 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும். அதுவரை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com