அதிமுகவை சீண்டிய பாஜக எம்எல்ஏ: வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

அதிமுக குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அதிமுக தலைமையிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அதிமுக குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அதிமுக தலைமையிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி தமிழ்நாடு பாஜகவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,“சட்டப்பேரவையில் தைரியமாக முதுகெலும்புடனும், ஆண்மையுடனும் பேசக் கூடிய கட்சியாக அதிமுகவை நான் பார்க்கவில்லை. 4 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மட்டுமே இருக்கும் நம்மால் பலத்த குரலை எழுப்ப முடிவதில்லை” எனத் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்து அதிமுகவினரை ஆத்திரமடையச் செய்தது. அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் பலரும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக இடையே உள்ள அரசியல் உறவு சுமூகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது குறித்து எந்தவித சர்ச்சையும் எழாமல் இருக்க கவனமுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து விளக்கமளித்த நயினார் நாகேந்திரன், “அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com