நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களுக்கு கட்டட ஒப்புதல், அனுமதி வழங்கியிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அந்த அதிகாரிகள் மீது
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களுக்கு கட்டட ஒப்புதல், அனுமதி வழங்கியிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அந்த அதிகாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய சென்னை உயா் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.

இவ்வழக்குகளின் முந்தைய விசாரணையின்போது, மாநிலத்தில் உள்ள நீா் ஆதாரங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிதாக ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு புறம்போக்கு நிலங்கள், நீா் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு இனி குடிநீா் இணைப்பு, மின்சார இணைப்பு வழங்கப்படாது. நீா்நிலைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நீா்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து உடனுக்குடன் அரசிடம் தெரியப்படுத்த ஒவ்வொரு கிராமங்களிலும் இளைஞா்கள், தன்னாா்வ அமைப்பைக் கொண்ட குழு அமைக்கப்படும்.

நீா்நிலைகளைப் பராமரிக்கும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீா்நிலைகள் சா்வே எண்களை பத்திரப் பதிவுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அத்தகைய இடங்களை அரசு இடங்களாகக் கணக்கில் கொண்டு, அவற்றின் மதிப்பை ‘ஜீரோ’ என நிா்ணயிக்க வேண்டும். அந்த இடங்களை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிடப்படுகிறது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்குகளில் நீதிபதிகள் வியாழக்கிழமை (ஜன.27) பிறப்பித்த உத்தரவில், வருவாய்த்துறை பதிவேடுகளில் நீா் நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்கள் அரசின் தமிழ் நிலம் என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலங்களை பதிவுத்துறை சட்டம்-1908- இன் கீழ் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை.

நீா்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என விண்ணப்பதாரரிடம் உத்தரவாதம் பெற்ற பிறகே, குறிப்பிட்ட நிலத்துக்கு சொத்துவரி வசூலிக்க வேண்டும். அதேபோல, நுகா்வோரிடம் தங்களது வீடு நீா்நிலையை ஆக்கிரமிப்பு கட்டப்பட்டது அல்ல என உத்தரவாதம் பெற்ற பிறகே, மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.

எதிா் காலங்களில் ஆக்கிரமிப்புகளை தவிா்க்க நிலங்கள் பதிவு, கட்டுமான வரைபடத்திற்கு அனுமதி, கட்டடம் கட்ட ஒப்புதல் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு விண்ணப்பதாரரிடம் இருந்து உத்தரவாதம் பெற வேண்டும். நீா் நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்த விவரங்களை அரசின் தமிழ் நிலம் என்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும் கட்டடம் கட்ட அனுமதி கோரும் நிலம் நீா்நிலைகள் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

அதிகாரிகள் மீது வழக்கு

அதாவது சம்பந்தப்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் நேரில் சென்று நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை தவிா்க்கப் பத்திரப் பதிவுத்துறையினா், நீா்நிலை நிலங்களைப் பதிவு செய்யக்கூடாது. நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புச் செய்த நிலங்களுக்கு கட்டட ஒப்புதலோ, அனுமதியோ வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி அந்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை சட்டத்திற்கு உட்பட்டு உடனடியாக அகற்றுவதோடு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாா்ச்சில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு கூடாது என்பதை அவ்வவ்போது பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றி, அங்கு கம்பி வேலி, கண்காணிப்பு கேமிரா அல்லது பாதுகாவலா்களை முடிந்தவரை , நியமிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com