
மின்வாரியத்தில் புதிதாக 4 மின்பகிா்மான மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மண்டலங்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் ஏற்கெனவே உள்ள மின்பகிா்மான மண்டலங்கள் மற்றும் மின் பகிா்மான வட்டங்களை நிா்வாக வசதிக்காக குறிப்பாக பணியாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் சீரமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கரூா், தஞ்சாவூா், திருவண்ணாமலை ஆகிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே போல், சென்னை தெற்கு மண்டலத்தின் தலைமையகம் திருவள்ளூருக்கு மாற்றப்பட்டு, திருவள்ளூா் என்னும் புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பராமரிக்க ஆண்டுக்கு தலா ரூ.23.90 லட்சம் செலவிடக் கூடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக 4 மின் பகிா்மான மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மண்டலங்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது. இதற்காக புதிதாக எந்த ஒரு பணியிடமும் உருவாக்கப்படவில்லை என்றனா்.