
பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு
நாமக்கல்: நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 550 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எருமப்பட்டி ஒன்றியம் பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது.
இந்த போட்டியில் 550 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றனர். காலை 8:30 மணிக்கு போட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். காளைகள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, பெரம்பலூர், சேலம் மாவட்டங்களிலிருந்து காளை உரிமையாளர்களும், வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்க முயன்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன.
கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தப் போட்டியில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் லேசான காயமடைந்தனர்.