
பெகாசஸ் விவகாரத்தில் மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை 'நியூ யார்க் டைம்ஸ்' நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இதையும் படிக்க- லதா மங்கேஷ்கர் உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்
அந்நிய நாட்டு உளவுச் செயலியை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது மட்டுமின்றி அதை மூடிமறைத்து நாடாளுமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் ஏமாற்றியது சட்டவிரோதம் மட்டுமல்ல, தேச துரோகமும் ஆகும். இந்தக் குற்றத்தைச் செய்த ஒருவர் பிரதமர் பதவியில் நீடிப்பது இந்த நாட்டுக்கே அவமானம் ஆகும். எனவே நரேந்திர மோடி உடனடியாகப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றிப் பல மாதங்கள் ஆன பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும்; பெகாசஸ் மூலம் மோடி அரசு செய்துள்ள தேசத் துரோகத்தைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் ஜனவரி 31 அன்று நிகழ்த்தப்பட உள்ள குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.