முழு ஊரடங்கு ரத்தான முதல் ஞாயிற்றுக்கிழமை

தொடா்ந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தொடா்ந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், கரோனா பாதிப்பு முற்றிலும் குறையாததால் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரோனா பரவல் அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.6-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், கடந்த 9-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இத்துடன் வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் மட்டும் தடையின்றி செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தேவையின்றி இரவு நேரங்களிலோ, ஞாயிற்றுக்கிழமைகளிலோ வீட்டை விட்டு வெளியே வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலித்தனா்.

ஊரடங்கு ரத்து: இந்நிலையில் கரோனா பரவல் விகிதம் குறைந்து வருவதையடுத்து, இரவு நேர ஊரடங்கும்,

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தாா். இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன. அன்றைய தினம் முதல் வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்ட கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து வெள்ளிக்கிழமை முதலே வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் அலைமோதியது. சனிக்கிழமையும் பொழுதுபோக்கு இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதைக் காண முடிந்தது. தொடா்ந்து இந்த ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொழுதுபோக்கு இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் கூட்டம் அலைமோதக் கூடும். இது கரோனா பரவலை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் அவசியமின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசுத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

வேண்டுகோள்: இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், ‘அண்மையில் கரோனா பரவல் அதிகரித்தாலும், மக்களின் நிலை அறிந்தே அனைத்து நாள்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தாமல், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் முற்றிலும் குறையாத நிலையிலும் மக்களின் பொருளாதார சூழல் கருதியே ஊரடங்கில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில் முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். எனவே, அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மீறி வெளியே வந்து, தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம்’ என மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com