ஒழுங்கீனமும், முறைகேடும் கண்டறியப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கவுன்சிலர் முதல் மேயர் வரை அனைவரும் எந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாகக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
ஒழுங்கீனமும், முறைகேடும் கண்டறியப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

உள்ளாட்சிப் பதவிகளில் ஒழுங்கீனம் மற்றும் முறைகேடு செயல்களில் ஈடுபட்டால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தலைப்பிலான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல் அருகே பொம்மைக்குட்டை மேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை உரையாற்றியதாவது: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி சார்ந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாநாட்டு வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்குப் பின்னால் உங்கள் உழைப்பு இருக்கிறது என்பதை நான் அறிவேன். இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் இத்தகைய பொறுப்புக்கு வரும்போது எத்தனை சிரமங்களை அடைந்திருப்பார்கள் என்பதும் தெரியும். அதே பொறுப்புடன் தங்களுடைய பதவியை கவனிக்க வேண்டும் என்பதற்காக தற்போது உங்கள் அனைவரையும் அழைத்திருக்கிறோம்.

உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடியாகும். பெரியார் ஈரோட்டிலும், ராஜாஜி சேலத்திலும் நகராட்சி தலைவர்களாக பதவி வகித்தவர்கள். விருதுநகரில் காமராஜர் உள்ளாட்சி பதவி ஒன்றை வகித்துள்ளார். அண்ணா சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டவர். நான் சென்னை மாநகராட்சியின் மேயர் பொறுப்பில் இருந்தேன். அமைச்சர் மா. சுப்ரமணியன் மேயராகவும், கே.என் நேரு ஒன்றிய தலைவராகவும் பதவி வகித்தவர்களாவர். மக்கள்பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சித் அமைப்புகள் தான். அந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத தான் மக்களின்நேரடியாக பணியை பெற முடியும். திமுகவை பொறுத்தவரை நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம். 

அனைத்து வளங்களை கொண்ட மாவட்டம் நாமக்கல் மாவட்டம். இந்தியாவில் தலைசிறந்த லாரி கட்டுமானம் முதல் கோழிப்பண்ணை முதல் தொழில்வளம் பெற்ற மாவட்டம் இது. இத்தகைய சிறப்பு மிகுந்த பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. நாமக்கல் கவிஞருக்கு திமுக தலைவராக இருந்த கருணாநிதியுடன் தொடர்பு இருந்தது. நீங்கள் பெயரளவில் மட்டுமில்லை கருணையில் நீதிவேல் என கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அவர் ஆட்சி பொறுப்பில் இருந்த போது தான் சென்னை தலைமைச்செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு பெயர் வைத்தார். தலைவரான எனது தந்தை கருணாநிதி, என்னை படி, படி என படிக்குமாறு வலியுறுத்தி வந்தார். மக்கள் பணியாற்ற வேண்டுமென நான் அரசியல் பாதையை தேர்வு செய்தேன். 

ஒரு கொள்கைக்காக லட்சியத்திற்காக பணியாற்ற வேண்டுமென நினைத்தேன். அப்படி நினைத்த எனக்கு சிறைச்சாலைகள் தான் கிடைத்தது. திருமணமான 5 மாத காலத்தில் மிசா காலத்தில் ஓராண்டு சிறையில் இருந்தேன். கடந்த 1977 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்தேன். மக்கள் பிரதிநிதியாக நான் சட்டப்பேரவையில் நுழைய 12 ஆண்டுகள் ஆகியது. 1989 -இல் தான் சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக நுழைந்தேன். வாழ்க்கையில் எந்த பொறுப்பை பெறாமல் மறைந்தவர்கள் ஏராளமானோர் உண்டு. அப்படி கிடைக்கும் பொறுப்பை எப்படி தக்க வைத்துக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.

இந்த பதவி சக்தியை மக்களுக்காவே நீங்கள் பயன்படுத்துங்கள். கடந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களிடத்திலும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. கரோனா காலத்தில் உதவித்தொகை ரூ. 4 ஆயிரம், 22 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, நகைக்கடன் தள்ளுபடி, மக்களைத் தேடி மருத்துவம் ,  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ன பல்வேறு திட்டங்களை ஓராண்டு காலத்தில் இந்த ஆட்சியில் மக்களுக்கு நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மாநகராட்சி மேயர் முதல் ஊராட்சி பிரதிநிதிகள் வரையிலான பெண்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கணவரிடம் வழங்காதீர்கள். விதிகளை மீறும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது சட்டப்படியும், நியாயப்படியும் கடுமையான நடவடிககை எடுக்கப்படும்.

தங்களுடைய பொறுப்புகளில் ஒழுங்கினமாகவோ, நிர்வாகத்தில் முறைகேடு செய்தாலோ, எனது கவனத்திற்கு தெரிய வந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தின் எதிர்காலம் என்பது திமுக கையில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாம் தலைகுனியக் கூடாது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உங்களுக்கு முதலில் தேவை ஒற்றுமை. அந்த ஒற்றுமை இல்லையெனில் அனைத்துப் பணிகளும் முடங்கிவிடும். விருப்பு, வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலப்பணிகளை உறுதியுடன்செய்ய வேண்டும். ஒற்றுமையாகஇருங்கள் ஊருக்காக உழையுங்கள் என்ற அடிப்படை கருத்தினை கொண்டது தான் திமுக அரசின் நோக்கமாகும். இலக்கை நோக்கி உழையுங்கள்.

அனைத்து சமூக ரீதியிலான பிரச்னைகளையும் கவனிக்க வேண்டும். கொள்கையும், கோட்பாடும் தான் நிரந்திரமானது. தமிழக விடியலுக்காக திமுக பாடுபட்டதாக இருக்க வேண்டும். கடந்த ஓராண்டில் 70 முதல் 80 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதே சரித்திரம் தான் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com