காந்திகிராம பல்கலை.யில் தொடரும் நிர்வாக சிக்கல்: புதுச்சேரி துணைவேந்தருக்கு கூடுதல் பொறுப்பு!

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் தொடரும் நிர்வாக சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரை புதுச்சேரி துணைவேந்தர் குர்மித் சிங்கை மத்திய கல்வி அமைச்சகம் நியமித்துள்ளது.
காந்திகிராம பல்கலை.யில் தொடரும் நிர்வாக சிக்கல்: புதுச்சேரி துணைவேந்தருக்கு கூடுதல் பொறுப்பு!

திண்டுக்கல்: காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் தொடரும் நிர்வாக சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரை புதுச்சேரி துணைவேந்தர் குர்மித் சிங்கை மத்திய கல்வி அமைச்சகம் நியமித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை.யின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் 2 பேராசிரியர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை.யில் துணைவேந்தராக இருந்த நடராஜன், 5 ஆண்டு காலம் பணி நிறைவு செய்து கடந்த 2019 மே மாதம் ஓய்வுப் பெற்றார். அதன்பின்னர், பல்கலை.யின் மூத்தப் பேராசிரியர்களான சுந்தரவடிவேலு, சுப்புராஜ், குபேந்திரன் ஆகியோர் பொறுப்பு துணை வேந்தராக செயல்பட்டனர்.

இதனிடையே கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் புதிய துணைவேந்தராக மாதேஸ்வரன் நியமிக்கப்பட்டார். பெங்களூருவிலுள்ள சமூக மற்றும் பொருளாதார  மாற்றத்திற்கான ஆய்வு மையத்தில் 30 ஆண்டுகளாக பேராசிரியராகவும், அதன் இயக்குநராகவும் பதவி வகித்த அவர், துணைவேந்தராக  நியமிக்கப்பட்ட 3 மாதங்களிலேயே தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து மூத்த பேராசிரியரான டிடி.ரங்கநாதன், பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதனிடையே பல்கலை. நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், பொறுப்பு துணைவேந்தரான டி.டி.ரங்கநாதனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்த மத்திய கல்வி அமைச்சகம், புதுச்சேரி பல்கலை. துணைவேந்தர் குர்மித் சிங்கிற்கு காந்திகிராம பல்கலை. துணைவேந்தர் பொறுப்பை கூடுதலாக வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 11 பேர் கொண்ட நிர்வாகக் குழுவிலிருந்து பேராசிரியர்கள், வில்லியம் பாஸ்கர், ஆனந்தகுமார் ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பல்கலை. வட்டாரத்தில் விசாரித்தபோது, பல்கலை. வேந்தரை அவமதித்தது, பதிவாளர் பணியிடை நீக்கத்தில் பின்பற்றிய அசாதாரண நிலை, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது, மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையை அலட்சியப்படுத்தியது என பொறுப்பு துணைவேந்தர் தலைமையிலான நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

வேந்தரை ஆலோசிக்காமல்  தனித்து முடிவு

பல்கலை.  நிர்வாக விவகாரங்கள் குறித்து வேந்தரிடம் ஆலோசிக்காமல், தனிச்சையாக முடிவு எடுத்துள்ளதாகவும் வேந்தரை ஆலோசிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே கடந்த 2021 நவம்பர் மாதம், காந்திகிராம பல்கலை. க்கு வந்த வேந்தர் அண்ணாமலைக்கு, பல்கலை. நிர்வாகம் சார்பில் முறையாக வரவேற்பு அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

பதிவாளர் பணியிடை நீக்கம்

இந்நிலையில் காந்திகிராம கிராமியப் பல்கலை. பதிவாளராக பணியாற்றி வந்த விபிஆர்.சிவக்குமார் கடந்த ஏப்ரல் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து சிவக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனாலும், நீதிமன்ற தடை ஆணையுடன் சென்ற சிவக்குமாரை மீண்டும் பணியில் சேர தற்காலிக துணைவேந்தரான ரங்கநாதன் அனுமதிக்கவில்லை.

இதனிடையே மத்திய கல்வி அமைச்சகம், நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றுமாறு காந்திகிராம பல்கலை. வேந்தர் அண்ணாமலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதனை வேந்தர் அண்ணாமலை பல்கலை. பொறுப்பு துணைவேந்தரான ரங்கநாதனுக்கு பரிந்துரைத்தபோதும், பதிவாளரை விவகாரத்தை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் வேந்தர் மட்டுமின்றி மத்திய கல்வி அமைச்சகமும் காந்திகிராம பல்கலை. நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்ததோடு, புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக பீகார் மத்திய பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஹெச்.சி.எஸ்.ரத்தோர் தலைமையில் குழு அமைத்து கடந்த 4 நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

ஆந்திரம், பஞ்சாப் துணைவேந்தர்கள் விசாரணை

பல்கலை. நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பஞ்சாப் பல்கலை. மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பழங்குடிகள் மத்திய பல்கலை. துணைவேந்தர்கள் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க மத்திய  கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 3 நாள்களுக்கு முன்பு காந்திகிராம பல்கலை.யில் 2 துணைவேந்தர்களும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் விவரம் சமர்ப்பிக்கட்ட உடனேயே, பொறுப்பு துணைவேந்தர் டி.டி.ரங்கநாதனை விடுவித்த மத்திய கல்வி அமைச்சகம், புதுச்சேரி துணைவேந்தர் குர்மித் சிங்கிற்கு காந்திகிராம பல்கலை. துணைவேந்தர் பதவியை கூடுதல் பொறுப்பாக வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நிர்வாகக் குழுவிலிருந்து 2 பேர் ராஜிநாமா

காந்திகிராம பல்கலை. நிர்வாகக் குழுவில் வேந்தர் தரப்பில் 3 பேர், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 3 பேர், பல்கலை. சார்பில் 3 பேர், துணேவேந்தர், பதிவாளர் என 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். காந்திகிராம பல்கலை.க்கு வெளியிலிருந்து ஒருவருக்கு துணைவேந்தர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கிய மத்திய கல்வி அமைச்சகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்கலை.யில் சார்பில் இடம் பெற்றிருந்த பேராசிரியர்கள் ஆனந்தகுமார், வில்லியம் பாஸ்கரன் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com