சோழிங்கநல்லூர் ஆவின் நிறுவனத்தில் இறையன்பு திடீர் ஆய்வு

சென்னை சோழிங்கநல்லூர் ஆவின் நிறுவனத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு விற்பனையை உயர்த்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். 
சோழிங்கநல்லூர் ஆவின் நிறுவனத்தில் இறையன்பு திடீர் ஆய்வு


சென்னை சோழிங்கநல்லூர் ஆவின் நிறுவனத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு விற்பனையை உயர்த்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் மற்றும் பால் உப பொருள்கள் பால் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது, சூரிய மின் உற்பத்தியை பயன்படுத்துவதை அதிகப்படுத்தி மின் செலவினங்களை குறைப்பது, பால் பண்ணை இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தி, உற்பத்தி செலவினங்களை குறைப்பது, பாலகங்களில் குழந்தைகள் விரும்பும் பால் பொருள்களை பாலகத்தின் முன் பகுதியில் காட்சிப்படுத்தி விற்பனையை அதிகரிப்பது, ஆவின் பாலகங்களில் உள்ள விலைப்பட்டியல் நுழைவு வாயில் அருகே வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி பெரிதாக படங்களுடன் கூடிய விலைப்பட்டியலை காட்சிப்படுத்துதல் வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும், ஒவ்வொரு வாரமும் பணிக்குழு அமைத்து நிறுவனத்தின் மேம்பாடு மற்றும் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான சிறந்த ஆலோசனைகள் கூறும் அலுவலர்களுக்கு அதற்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். 

ஆவின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை அவ்வப்போது நடத்தி அவர்களிடையே நிறுவனத்தின் பொருள்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான விவரங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும் என இறையன்பு அறிவுத்தினார்.

பால் பண்ணை உற்பத்தி மற்றும் குளிரூட்டும் பிரிவு, தரக்கட்டுப்பாட்டு பிரிவு, பொறியியல் பிரிவுகளின் பணிகளை ஆய்வு செய்து பால் பண்ணை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

மேலும், பால் ஏற்றி வந்த டேங்கர் லாரிகளில் பாலின் தரம் பரிசோதனை குறித்து ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடு ஆணையர், ஆவின் மேலாண் இயக்குநர், மருத்துவர், ஆவின் தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் பால் பண்ணை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com