நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூங்கோயில் சப்பரம், வெள்ளிச்சப்பரம், கற்பக விருட்ச வாகனம், வெள்ளிக்கமலம், தங்க பூதம், சிம்மம், வெள்ளி குதிரை, வெள்ளி ரிஷபம், இந்திர விமானம், வெள்ளி சப்பரம், பல்லக்கு, வெள்ளி காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்து வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமையில் சுவாமி நடராசப்பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளி உள் பிரகாரத்தில் வீதியுலா வந்தார். பின்னர், பச்சை சாத்தி எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா நடைபெற்றது. சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி நகர்வலம் வந்தனர்.

விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்மன் தேருக்கு எழுந்தருளினர். முதலில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுத்து நிலையை அடைந்தது. காலை 9 மணிக்கு மேல் சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஆட்சியர் வே.விஷ்ணு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.அப்துல் வஹாப், நயினார் நாகேந்திரன், மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு உள்பட பலர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரு ஆண்டுகளுக்குப் பின்பு தேரோட்டம் நடைபெற்றதால்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com