தமிழக தொழிலாளர்களுக்கு வேலை: கட்டுமான ஒப்பந்ததாரர்களிடம் அமைச்சர் வலியுறுத்தல்

தமிழக தொழிலாளர்களுக்கு வேலை வழங்குமாறு தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக தொழிலாளர்களுக்கு வேலை: கட்டுமான ஒப்பந்ததாரர்களிடம் அமைச்சர் வலியுறுத்தல்
தமிழக தொழிலாளர்களுக்கு வேலை: கட்டுமான ஒப்பந்ததாரர்களிடம் அமைச்சர் வலியுறுத்தல்


திருச்சி: தமிழகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்து மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள், தங்களது கட்டுமானப் பணிகளுக்கு அதிகளவில் தமிழக தொழிலாளர்களுக்கு வேலை வழங்குமாறு தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு ஒப்பந்த கட்டுமானப் பணிகளில் வடமாநில தொழிலாளர்களே அதிகம் ஈடுபடுத்தப்படுவதால், வேலை வாய்ப்பு இல்லாத தமிழக கூலித் தொழிலாளர்கள் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைத்தேடிச் செல்லும் அவலம் உருவாகியுள்ளது.

திருச்சியில் மன்னார்புரம் அருகே கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எ.வ. வேலு இதனை வலியுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

கட்டுமான நிறுவனங்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்த அமைச்சர் எ.வ. வேலு, ஒரே ஆண்டில், தொழிலாளர்கள் நல வாரியத்தில் சுமார் 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதனால் தமிழக கூலித் தொழிலாளர்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் இங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளில் பெரும்பாலும் வட இந்தியத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதே நிலை நீடித்தால், நமது கட்டுமானப் பணிகளில் வட இந்திய தொழிலாளர்களின் ஆளுமை அதிகரிக்காதா? இது ஒரு சாதாரண பிரச்னை அல்ல. கட்டுமான ஒப்பந்ததாரர்கள் தமிழக தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பினை வழங்கும்போதுதான் நமது மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு என்று மிகப்பெரிய வரலாறு உள்ளது. அவை, கீழடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்று வரும் அகழாய்வு மூலம் தெரிய வருகிறது. தமிழகத்தின் கட்டுமானத் திறனுக்கு சான்றாக மிகப்பெரிய கோயில்களும், அணைகளும் கம்பீரமாக வீற்றிருக்கின்றன என்றும் எ.வ. வேலு குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அரசு அறிவித்ததும், திருச்சியில் நிலத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டது. தற்போது பல்வேறு பணிகள் தொடங்கியிருப்பதால், கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com