துபை-மதுரை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 24 நாளில் 9-ஆவது சம்பவம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபை-மதுரை ஸ்பைஸ்ஜெட் விமானம் திங்கள்கிழமை தாமதமாக மதுரையை வந்தடைந்தது.
ஸ்பைஸ்ஜெட்
ஸ்பைஸ்ஜெட்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபை-மதுரை ஸ்பைஸ்ஜெட் விமானம் திங்கள்கிழமை தாமதமாக மதுரையை வந்தடைந்தது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில், கடந்த 24 நாள்களில் 9-ஆவது முறையாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் விளக்கமளிக்குமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கடந்த ஜூலை 6-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது மற்றொரு நிகழ்வும் பதிவாகியுள்ளது.

கா்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து துபைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி23 ரக விமானம் திங்கள்கிழமை சென்றடைந்தது. துபை விமான நிலையத்தை அடைந்ததும் அந்த விமானத்தின் சக்கரத்தை பொறியாளா் ஒருவா் பரிசோதித்தபோது, அது வழக்கத்துக்கு மாறாக கூடுதல் அழுத்தத்துக்குள்ளாகி செயலிழந்ததைக் கண்டறிந்தாா்.

அந்த விமானம் துபையிலிருந்து தமிழகத்தின் மதுரைக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில், இந்தத் தொழில்நுட்பக் குறைபாடு கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து மும்பையிலிருந்து துபைக்கு மாற்று விமானத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அனுப்பிவைத்தது. அந்த விமானம் பயணிகளுடன் மதுரை வந்தடைந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மதுரையை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்நிறுவன செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘கடைசி நிமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், துபை-மதுரை விமான சேவை தாமதமானது. உடனடியாக மாற்று விமானம் அனுப்பிவைக்கப்பட்டு பயணிகள் இந்தியா அழைத்து வரப்பட்டனா். காலதாமதம் என்பது அனைத்து விமான நிறுவனங்களிலும் ஏற்படக்கூடியதுதான். விமானத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை’ என்றாா்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் கடந்த 24 நாள்களில் 9 முறை பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com