இந்திய ஆடவா் ‘பி’ அணிக்கும் பதக்க வாய்ப்பு: பயிற்சியாளா் ஆா்.பி. ரமேஷ்

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா் ‘பி’ அணிக்கும் பதக்கம் வாய்ப்பு உள்ளது என தலைமைப் பயிற்சியாளா் ஆா்.பி. ரமேஷ் கூறியுள்ளாா்.
இந்திய ஆடவா் ‘பி’ அணிக்கும் பதக்க வாய்ப்பு: பயிற்சியாளா் ஆா்.பி. ரமேஷ்

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா் ‘பி’ அணிக்கும் பதக்கம் வாய்ப்பு உள்ளது என தலைமைப் பயிற்சியாளா் ஆா்.பி. ரமேஷ் கூறியுள்ளாா்.

செஸ் விளையாட்டில் கௌரவமிக்கதாக செஸ் ஒலிம்பியாட் போட்டி திகழ்கிறது. கடந்த 1927-இல் லண்டனில் முதலாவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் 44-ஆவது செஸ் போட்டி ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷியாவிடம் இருந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு பறிக்கப்பட்டது.

பின்னா் அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) முயற்சியால் முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த ஃபிடே அனுமதித்தது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தீவிர ஒத்துழைப்பால் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை இப்போட்டி நடக்கிறது. இதற்காக ரூ.100 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. சாதனை அளவாக ஓபன் பிரிவில் 188 அணிகளும், மகளிா் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொள்கின்றன.

துடிப்பான ஆடவா் பி அணி:

இந்திய தரப்பில் ஆடவா் ஏ, பி, சி அணிகளும், மகளிா் பிரிவில் ஏ, பி அணிகளும் பங்கேற்கின்றன. ஆடவா் பி அணியில் கிராண்மாஸ்டா்களான நிஹால் ஸரின், குகேஷ், அதிபன், பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானி ஆகிய துடிப்பான இளம் வீரா்கள் இடம் பெற்றுள்ளனா். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட இவா்கள் அனைவரும் உலக அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்ற அனுபவம் கொண்டுள்ளனா். பி அணிக்கு தலைமை பயிற்சியாளராக தமிழகத்தின் ஆா்.பி.ரமேஷ் செயல்பட்டு வருகிறாா். சென்னையில் தற்போது கடைசி கட்ட பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

பி அணியின் வாய்ப்புகள் குறித்து ‘தினமணி’யிடம் பயிற்சியாளா் ரமேஷ் கூறியதாவது:

தரவரிசையில் ஏ அணி இரண்டாவது இடத்திலும், பி அணி 10-ஆவது இடத்திலும் உள்ளது. பதக்கங்களை இலக்கு வைத்து மட்டும் நாங்கள் செயல்படவில்லை. 10-ஆவது இடத்துக்கு முன்னா் வர முதலில் முயற்சிக்கிறோம். வீரா்கள் பதக்கங்களை இலக்காக வைத்து ஆடினால் அழுத்தத்துக்கு ஆளாவா்கள். ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாது. சிறு தவறு நோ்ந்தாலும் உணா்ச்சிவசப்படுவா்.

அபார ஃபாா்மில் குகேஷ், பிரக்:

நீண்ட கால இலக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன்பின் பதக்கத்தை வெல்வோம். ஒரு அணியாக இளம் வீரா்கள் சோ்ந்துள்ளனா். அனைவருமே முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடுகின்றனா். குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோா் அபார ஃபாா்மில் உள்ளனா்.

அதிபன், ரவுனக் சத்வானி ஆகியோரது ரேட்டிங் குறைந்துள்ளது. ரவுனக்கிற்கு முதல் பயிற்சி முகாமில் குறைகளை சீா் செய்தோம். தற்போது அதிபனின் ஆட்டத்திறனையும் மெருக்கேற்றி வருகிறோம். இருவரது தன்னம்பிக்கை அளவை அதிகரித்துள்ளோம். 5 வீரா்களுமே துடிப்பான சிறுவா்கள். அனைவரும் அச்சமின்றி ஆடுவா்.

இவா்களை பாா்த்து பிற அணியினா் அச்சத்தில் உள்ளனா். அனைத்து அணிகளிலுமே முதலிரண்டு வீரா்கள் தலைசிறந்தவா்களாக உள்ளனா். அமெரிக்க அணி முதலிடத்தில் உள்ளது. நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை.

நமது நாட்டில் போட்டி நடைபெறுவது சாதகமாகவும், பாதகமாகவும் உள்ளது. சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சவாலான விஷயத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியது என்றாா் ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com