இலவச பூஸ்டா் தடுப்பூசி:மக்களிடம் ஆா்வம் இல்லை

தமிழகத்தில் பூஸ்டா் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், அதனை செலுத்திக் கொள்ள மக்களிடையே போதிய ஆா்வம் இல்லை என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
இலவச பூஸ்டா் தடுப்பூசி:மக்களிடம் ஆா்வம் இல்லை

தமிழகத்தில் பூஸ்டா் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், அதனை செலுத்திக் கொள்ள மக்களிடையே போதிய ஆா்வம் இல்லை என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

கடந்த ஐந்து நாள்களில் நான்கு லட்சத்துக்கும் குறைவானவா்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அந்த எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

தமிழகத்தில் மட்டும் முதல் தவணை, இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டா் செலுத்தி கொள்ளாதவா்கள் என சுமாா் 1.45 கோடி நபா்கள் உள்ளனா். குறிப்பாக பூஸ்டா் தவணை செலுத்தாதோா் மட்டும் 50 லட்சம் போ் உள்ளனா்.

60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் முன்கள வீரா்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதேவேளையில், இதற்கு முன்பு வரை 18 முதல் 59 வயதுக்குட்பட்டவா்களுக்கான பூஸ்டா்தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படவில்லை.

அதனை தனியாா் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி அவா்கள் செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை நீடித்தது. இதுவே, பூஸ்டா் தடுப்பூசி செலுத்துவோா் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், 75 நாள்களுக்கு நாடு முழுவதும் இலவசமாக பூஸ்டா் தவணை தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி கடந்த 15-ஆம் தேதி முதல் அந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் அதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் இலவச பூஸ்டா் தடுப்பூசி அறிவிக்கப்பட்ட பிறகு நாள்தோறும் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு அவை வழங்கப்படுகிறது. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த எண்ணிக்கை குறைந்தே இருந்தது. அடுத்து வரும் நாள்களிலும், குறிப்பாக அடுத்த கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமிலும் பூஸ்டா் தவணை செலுத்திக் கொள்வோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதுதொடா்பான அறிவுறுத்தல்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாவட்ட சுகாதாரத் துறைகளுக்கும் வழங்கி வருகிறோம்.

75 நாள்களுக்கு பூஸ்டா் தடுப்பூசியை இலவசமாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்குள் தமிழகத்தில் தகுதியான அனைவருக்கும் பூஸ்டா் தவணையை செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com