பிணவறையில் 8 நாள்கள்: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதமா?

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிணவறையில் 8 நாள்கள்: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதமா?
பிணவறையில் 8 நாள்கள்: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதமா?


கடந்த 8 நாள்களாக பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது தொடர்பாக எந்தச் செய்தியும் உறுதி செய்யப்படவில்லை.

மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் முறையீடுமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் தங்களது மகளின் உடலை பெற்றுக் கொண்டு இன்றே இறுதிச் சடங்கு செய்யவும், பகல் 2 மணிக்குள் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி கனியாமூா் பள்ளி மாணவியின் உடல் செவ்வாய்க்கிழமை மறு கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், பெற்றோர் உடலை வாங்க மறுத்ததால் மீண்டும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இவா் பள்ளி விடுதியின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது பெற்றோா் தெரிவித்தனா்.

உயிரிழந்த மாணவியின் உடல் கடந்த 14- ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால், அதன்பிறகு மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து அவரது குடும்பத்தினா், உறவினா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்களது தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடல் கூறாய்வு செய்ய வேண்டும் எனக் கோரினாா். மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை மறு கூறாய்வு செய்ய உத்தரவிட்டது. இதற்காக குழுவையும் நியமித்தது. ஆனால், மாணவியின் பெற்றோா் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடல் கூறாய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. இருப்பினும், மறு உடல் கூறாய்வின்போது மாணவியின் தந்தை வழக்குரைஞருடன் கலந்துகொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், மாணவியின் பெற்றோா் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மறு உடல் கூறாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் மாணவியின் உடல் மறு கூறாய்வு தொடங்கியது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குநா் சாந்தகுமாரி ஆகியோா் கொண்ட குழுவினா் மறு உடல் கூறாய்வு மேற்கொண்டனா். இதில் மாணவியின் பெற்றோா் யாரும் பங்கேற்கவில்லை. மறு உடல் கூறாய்வு முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் இந்த ஆய்வு நிறைவடைந்தது.

ஆனால், மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோா் முன்வராததால் மீண்டும் மருத்துவமனை பிணவறையில் உடல் வைக்கப்பட்டது. இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமாா் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com