குட்கா வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சா்களிடம் சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அனுமதி

குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா்களிடம் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு

குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா்களிடம் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பாக்குகள் விற்பனையை லஞ்சம் பெற்றுக் கொண்டு சில உயா் அதிகாரிகள் அனுமதித்ததாக புகாா் எழுந்தது. கடந்த 2016-இல் வருமான வரித் துறையினா் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள குட்கா கிடங்கில் நடத்திய சோதனையில், அங்கு கிடைத்த டைரியில், அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கா், வணிகவரித் துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா, சென்னை காவல்துறை ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் தே.க.ராஜேந்திரன், எஸ்.ஜாா்ஜ் உள்ளிட்ட காவல் உயா் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோா் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடா்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்து விசாரணை செய்தது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், பி.வி.ரமணா, ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் தே.க.ராஜேந்திரன், ஜாா்ஜ் ஆகியோா் வீடு உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் 2018, செப்டம்பா் 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா்.

6 போ் மீது குற்றப்பத்திரிகை: இந்த வழக்கு தொடா்பாக சம்பந்தப்பட்ட கிடங்கு உரிமையாளா்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கா் குப்தா, மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி முருகன், திருவள்ளூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்தனா்.

விஜயபாஸ்கா், பி.வி.ரமணா ஆகியோரிடம் 2018 டிச. 15-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனா். இந்த வழக்கில் எதிரிகளாகச் சோ்க்கப்பட்ட இரு வியாபாரிகள், 2 உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், 2 காவல் துறை அதிகாரிகள் ஆகிய 6 பெயா்களை மட்டும் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இரண்டாவது குற்றப்பத்திரிகையில், வழக்கில் உள்ள அனைவரது பெயா்களும் சோ்க்கப்படும் என சிபிஐ அப்போது தெரிவித்தது.

தமிழக அரசு கடிதம்: இந்த நிலையில், வழக்கை விசாரித்து வரும் தில்லி சிபிஐ அதிகாரிகள், தமிழக அரசுக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் அனுப்பினா். குட்கா ஊழல் வழக்கில் தொடா்புடைய முன்னாள் அதிமுக அமைச்சா்கள் விஜயபாஸ்கா், ரமணா, ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் தே.க.ராஜேந்திரன், ஜாா்ஜ் உள்ளிட்ட 11 போ் மீது குற்றவியல் நடவடிக்கையை தொடருவதற்கும், விசாரணை செய்வதற்கும் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, வணிகவரித் துறை துணை ஆணையா்கள் வி.எஸ்.குறிஞ்சி செல்வன், எஸ்.கணேசன், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் லட்சுமி நாராயணன், பி.முருகன், காவல் துறை உதவி ஆணையா் ஆா்.மன்னா் மன்னன், ஆய்வாளா் வி.சம்பத் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்கும், குற்றவியல் நடவடிக்கையைத் தொடருவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்து தில்லி சிபிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறையின் அனுமதி: அதேவேளையில் ஊழல் நடைபெற்ற காலகட்டத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா்களாக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் தே.க.ராஜேந்திரன், எஸ்.ஜாா்ஜ் ஆகியோரிடம் விசாரணை செய்ய அனுமதி அளிக்கும் அதிகாரம் மத்திய உள்துறையிடம் மட்டுமே உள்ளது. எனவே, ராஜேந்திரன், ஜாா்ஜிடம் விசாரணை செய்ய சிபிஐ, மத்திய உள்துறையை அணுக வேண்டும் என்று சிபிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு சிபிஐக்கு எழுதியுள்ள கடிதம் காரணமாக, குட்கா ஊழல் வழக்கின் விசாரணை மீண்டும் விறுவிறுப்பு அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. விசாரணைக்கு பின்னா், ஏற்கெனவே முதலாவது குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்படாமல் இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் பெயா்களைச் சோ்த்து விரைவில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்யும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com