கனியாமூர் பள்ளித் தாளாளர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அந்தப் பள்ளித் தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அந்தப் பள்ளித் தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி சிபிசிஐடி போலீஸார் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
 கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி (17) கடந்த 13 -ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.
 பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து அவர்களை சேலம் சிறையில் அடைத்தனர்.
 இந்த நிலையில், பள்ளித் தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் 3 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
 வாகனங்களுக்கு தீ வைத்த இருவர் கைது
 இதனிடையே பள்ளியில் நிகழ்ந்த வன்முறையின் போது காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டனை (26) போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 இதேபோல, காவல் துறை வாகனத்துக்கு தீ வைத்ததாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் நித்திஷ் (எ) வசந்தனை (19) போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வன்முறை தொடர்பாக கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 308-ஆக உயர்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com