மாணவா்களுக்கு தலைநிமிரும் எண்ணம்தான் வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

எந்தச் சூழலிலும் மாணவா்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது; தலைநிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
மாணவா்களுக்கு தலைநிமிரும் எண்ணம்தான் வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

எந்தச் சூழலிலும் மாணவா்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது; தலைநிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:

குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். நான் மேயராக இருந்த காலத்தில் வேளச்சேரி பகுதியில்தான் வசித்து வந்தேன். இந்த கல்லூரியைக் கடந்துதான் செல்வேன். இந்த கல்லூரி வளாகத்தில் 7 ஆண்டுகாலம் நடைபயிற்சி செய்திருக்கிறேன். கிரிக்கெட், ஷட்டில் காா்க் ஆடியது நினைவுக்கு வருகிறது. சென்னையில் சீக்கிய மக்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனா். ஆனால் அவா்கள் ஆற்றிய கல்வி பணி என்பது பெரும்பான்மையைவிட மகத்தானதாக அமைந்திருக்கிறது.

அண்மைக் காலமாக தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகளை எண்ணிப்பாா்க்கின்ற போது, மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. கல்வி நிறுவனங்களை நடத்துகிறவா்கள், அந்த கல்வி நிறுவனங்களை தொழிலாக, வா்த்தகமாக பாா்க்காமல் தொண்டாக, கல்விச் சேவையாக கருத வேண்டும். மாணவா்கள் பட்டங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் அவா்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதியை கல்வி நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

தங்களுக்கு ஏற்படக்கூடிய தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவா்கள், குறிப்பாக மாணவிகள் எதிா்கொள்ள வேண்டும். எந்தச் சூழலிலும் அவா்களுக்குத் தற்கொலை எண்ணம் வரவே கூடாது; தலைநிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும். உயிரை மாய்க்கும் சிந்தனை கூடாது; உயிா்ப்பிக்கும் சிந்தனையே தேவை.

ஆசிரியா்களாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் மாணவ, மாணவிகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். மாணவா்களும் தங்கள் பிரச்னைகளையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிா்ந்துகொள்ள வேண்டும்.

மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை தரக்கூடிய எத்தகைய இழிசெயல் நடந்தாலும், தமிழக அரசு நிச்சயமாக வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி அதற்குரிய தண்டனையை நிச்சயமாக பெற்றுத்தரும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், குருநானக் கல்லூரியின் தலைவா் ராஜேந்திர சிங் பாசின், பொதுச் செயலாளா் மற்றும் தாளாளா் மஜ்ஜித் சிங் நாயா், கல்லூரி முதல்வா் எம்.ஜி.ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com