'மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி' - பிரதமர் மோடியின் முழு உரை!

மாணவர்களின் வெற்றியே இந்தியாவின் வெற்றி என சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 
'மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி' - பிரதமர் மோடியின் முழு உரை!

மாணவர்களின் வெற்றியே இந்தியாவின் வெற்றி என சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், பல்கலைக்கழகத்தில் துறை வாரியாக முதலிடம் பெற்ற 69 மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பட்டம் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.  

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, 

பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் வாழ்த்துகள். மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் இது முக்கியமான நாள். ஏனெனில், அவர்கள்தான் இளைஞர்களை உருவாக்குகிறார்கள். தேசத்தை கட்டமைப்பவர்கள் அவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மாறலாம். ஆனால், ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள். 

இளைஞர்களின் சாதனைகளை கொண்டாட நாம் இங்கு கூடியிருக்கிறோம். இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள். இந்திய இளைஞர்கள் மீது இந்த உலகமே நம்பிக்கை வைத்திருக்கிறது.

'இளைஞர்களே எனது நம்பிக்கை' என்று சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றைக்கும் பொருந்தும். 

அதுபோல, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை அப்துல் கலாம். அவரது சாதனைகள் இன்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறது.  

கரோனா பெருந்தொற்று எதிர்பாராத ஒரு சம்பவம். நூறாண்டுக்கு வரும் ஒரு சோதனை இப்போது வந்துவிட்டது. அதிலிருந்து மீள உதவிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி. 

ஒரு வலுவான அரசால் எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், தனது கொள்கைகளால் மக்களை வழிநடத்திச் செல்ல முடியும். மக்களின் பங்களிப்புக்கு அதிக முக்கியத்துவத்தை வலுவான அரசால் மட்டும் இக்கொடுக்க முடியும். அந்த வகையில், புதிய கல்விக்கொள்கை மூலமாக மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும். 

இந்தியாவில் ஒவ்வொரு துறையும் வளர்ந்து வருகிறது. செல்போன் தயாரிப்பில் கடந்த ஆண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். 

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கும் மாணவர்களுக்குமான காலம். 

மாணவர்களின் கற்றலே இந்தியாவின் கற்றல். மாணவர்களின் வெற்றியே, இந்தியாவின் வெற்றி,  மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. 

உங்களது வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் தீட்டும்போது இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து தீட்டுகிறீர்கள். 

அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் என்று பேசினார். 

அதன்பின்னர், பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி. முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com